என்பதனையும்; இளவற்காக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் - இலக்குவனுக்காக இராமன் வருந்தி மூச்சற்றுக்கிடக்கின்றான் என்னும் நுட்பத்தையும்; நொய்தின் நோக்கிச் சிந்தையின் எண்ணி, எண்ணி - விரைவில் அறிந்து கொண்டு (இதனைத் தீர்த்தற்காம் உபாயம் பலவற்றையும்) சிந்தையினால் எண்ணி எண்ணி; தீர்வது ஓர் உபாயம் தேர்வான் - இத்துயர் தீர்வதற்குரிய உபாயம் ஒன்றனை ஆராய்வானானான்.
(6)
8709.
‘உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ? தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென் அன்றே; வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக் கள்ளனோ வென்றான்?’ என்றான், மழை எனக் கலுழும் கண்ணான்.
உள்ளுறு துன்பம் ஊன்ற - “உள்ளத்தில் உற்ற பெருந்துயரம் பதிந்துள்ளமையினால்; உற்றனன் உறக்கம் அன்றோ - இராமன் மூர்ச்சை உற்றான் அன்றோ?; தெள்ளிதின் உணர்ந்த பின்னை - தெளிவாக (அப்பிரான்) உணர்வு நிலைக்கு வந்த பின்னால்; சிந்தனை தெரிவென் அன்றே - (அவ்விராமனுடைய) சிந்தனை (எத்தகையதாக இருக்கும் என்பதனை) அறிவேன் அன்றோ! வள்ளலோ, தம்பிமாள வாழ்கிலன் - வள்ளல் தன்மையுடைய இராமனோ தம்பி இறந்தபின் தான் வாழமாட்டான் (இதுவே மூர்ச்சை தெளிந்தபின் அவனது முடிவாக இருக்கும்); மாய வாழ்க்கைக் கள்ளனோ வென்றான் - (அங்ஙனமாயின்) மாயத் தன்மையை உடைய கள்வனாகிய இந்திரசித்தோ வெற்றி பெற்றவனாவான்?” என்றான் மழையெனக் கலுழும் கண்ணான் - எனத் தனக்குள் கூறிக் கொண்டவனாகிய வீடணன் (பெருந்துன்பமுற்று) மழைபோல் நீர்சொரியுங் கண்களை உடையவனானான்.
(7)
8710.
‘பாசம் போய் இற்றாற் போலப் பதுமத்தோன் படையும் இன்னே நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை;