| 8718. | ‘அன்னவன்தன்னைக் கண்டால், ஆணையே, அரக்கர்க்கு எல்லாம் மன்னவ! நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன்’ என்னலும், ‘உய்ந்தோம், ஐய! ஏகுதும் விரைவின்’ என்றான்; சில் நெறி இருளில் சென்றார்; சாம்பனை விதியில் சேர்ந்தார். | அரக்கர்க்கு எல்லாம் மன்னவா!-“அரக்கர்க்கு எல்லாம் அரசனே!; அன்னவன் தன்னைக் கண்டால் - அந்த சாம்பனைக் கண்டால்; ஈண்டு நம்மை வாழ்விக்கும் உபாயம் வல்லன் - இப்பொழுது நம்மை வாழ்விக்கும் உபாயங் கூறுதலில் வல்லவன் அவனே; ஆணையே என்னலும் - இது உறுதியே” என்று (அனுமன்) கூறியதும்; ‘ஐய! உய்ந்தோம் ஏகுதும் விரைவின்’ என்றான் - (வீடணன்) ஐய, வாழ்ந்தோம் விரைவாகச் செல்லுவோம் என்றான்; சில்நெறி இருளில் சென்றார் - (இருவரும்) சிறிது தொலைவு இருளில் சென்றார்கள்; சாம்பனை விதியில் சேர்ந்தார் - சாம்பனை ஆகூழ் கூட்டுவிக்கச் சென்று சேர்ந்தனர். | ஆணை - உறுதி என்ற பொருளில் வந்தது. விதியில் சேர்ந்தார் என்றது, அவ்வளவு பரந்துபட்ட போர்க்களத்தில் சாம்பனைக் காணுதல் அருமையே ஆயினும் ஆகூழ் கூட்டுவித்தமையால் இருவரும் அவனைக் கண்டனர் என்பதற்காம். | (16) | | 8719. | எரிகின்ற மூப்பினாலும், ஏவுண்ட நோவினாலும், அரிகின்ற துன்பத்தாலும், ஆர் உயிர்ப்பு அடங்கி, ஒன்றும் தெரிகின்றது இல்லா மம்மர்ச் சிந்தையன்எனினும், வீரர் வருகின்ற சுவட்டை ஓர்ந்தான், செவிகளால்-வயிரத் தோளான். | எரிகின்ற மூப்பினாலும் - வருத்தத்திற்குக் காரணமான கிழத்தன்மையாலும்; ஏவுண்ட நோவினாலும் - அம்புகள் தைத்ததனாலான துன்பத்தாலும்; அரிகின்ற துன்பத்தாலும் - (நண்பர்களெல்லாம் இறந்துபட்டனரே என எண்ணுவதால்) |
|
|
|