செம்மையாள் - அமிழ்தம் போன்ற செம்மைச் செயலையுடையவள் ஆகிய திரிசடை; சிந்தையின் உணர்த்தினள் - (சீதையின்) மனத்தில் பதியும்படி கூறினாள்.
|
மருத்தனே மாயா சனகனாக வந்தவன் எனத் திரிசடை சீதைக்குக் கூறினாள். அமுதின் செம்மையாள் - சீதை உயிர் போகும் அளவு துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையைக் கூறி அவளைக் காப்பாற்றிய திரிசடையை உண்டார்க்கு இறுதி வராது தடுக்கும் அமுதின் செம்மையாள் என்றார். அந்தம் - முடிவு.
|
(94)
|
7726. | நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள், சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்; இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் அரோ.
|
அவள் உரை நாளும் தேறுவாள் நங்கையும் - அந்தத் திரிசடையின் சொல்லைக் கேட்டு எப்பொழுதும் ஆறுதல் அடையும் சீதையும்; சங்கையும், இன்னலும் துயரும் தள்ளினாள் - (தன் மனத்தில் இருந்த) ஐயத்தையும் (மனத்) துன்பத்தையும் (உடல்) துயரையும் நீக்கினாள்; அங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் - அவ்விடத்தில் இருந்து (சினத்தோடு) சென்ற இலங்கை காவலனாகிய இராவணன்; அங்கு நின்று இயற்றியது அறைகுவாம் - தன் அரண்மனையில் இருந்து செய்ததை இனிமேல் கூறுவோம்.
|
இன்னல் துயர் - ஒரு பொருட் பன்மொழி. இவற்றுள் ஒன்றை மனத்துக்கும் ஒன்றை உடல்சார் மெய்ப்பாட்டிற்கும் கொள்க. இப்படலத்தில் வஞ்சனை, அச்சுறுத்தல், அஞ்சுதல் முதலிய செயல்களும் சாவு, அழுகை போன்ற அவல நிலைகளும், மகிழ்ச்சியின் உள்ளடங்கு நிலைகளும் விளக்கப்பட்டுள்ள திறத்தை உன்னுக. இப்படலத்தில் வரும் உணர்ச்சி மாற்றங்கள் இப்படலத்தை நாடகக் கூறு உடையதாக்கிக் கம்ப நாடகம் என்ற தொடருக்கு உரிய விளக்கமாக அமைவது எண்ணி மகிழத் தக்கது.
|
(95) |