நெஞ்சம் புண்ணாகும் நெடுந்துயராலும்; ஆர் உயிர்ப்பு அடங்கி - அருமையான மூச்சு அடங்கப் பெற்று; ஒன்றும் தெரிகின்றது இல்லா - ஒன்றும் தெரியவியலாத; மம்மர்ச் சிந்தையன் எனினும் - மயக்கம் மிக்க மனத்தான் என்றாலும்; வயிரத் தோளான் - வயிரம் போன்ற தோள்களை உடைய சாம்பவன்; வீரர் வருகின்ற சுவட்டை செவிகளால் ஓர்ந்தான் - வீரர் இருவர் வருகின்ற அடையாளத்தைக் (காலடி ஓசையைக்) காதுகளால் ஓர்ந்து அறிந்தான். |
(17) |
| 8720. | ‘அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன்தானோ? இரக்கம் உற்று அருள வந்த தேவரோ? முனிவரேயோ? வரக் கடவார்கள், அல்லர்; மாற்றலர், மலைந்து போனார்; புரக்க உள்ளாரே!’ என்னாக் கருதினன், பொருமல் தீர்ந்தான். |
அரக்கனோ? என்னை ஆளும் அண்ணலோ? அனுமன தானோ?-வீடணனோ அல்லது என்னை ஆட்கொண்ட இராமனோ? அல்லது அனுமன்தானோ?; இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ? - இரக்கங்கொண்டு (இத்துன்பத்தை நீ்க்கி) அருள் செய்ய வந்த தேவரோ? முனிவர்களோ?; மாற்றலர் மலைந்து போனார் வரக்கடவார்கள் அல்லர் - பகைவர்கள் போர் செய்து வெற்றியுடன் சென்றார்களாதலின், அவர்கள் (இவ்விரவில்) வரமாட்டார்கள்; ‘புரக்க உள்ளாரே’ என்னாக் கருதினன் பொருமல் தீர்ந்தான் - (எனவே) ‘இப்போது வருபவர்கள் எம்மைக் காப்பாற்றும் தன்மைஉள்ள அன்பரே ஆவர்’ என எண்ணி மனத்துயர் நீங்கப் பெற்றவனானான். |
(18) |
அனுமன் வருகையால் சாம்பன் மகிழ்தல் |
| 8721. | வந்து அயல் நின்று, குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச் சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார்தம்மைத் தேற்றி, |