| 8725. | ‘எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும், முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும், வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த! பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி. |
மைந்த! - வலிமையுள்ளவனே! (அனுமனே!) எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்- எழுபதுவெள்ளம் வானரச் சேனையும், இராமனும், இலக்குவனும்; முழுதும் இவ்உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி தானும் - இம் மூவுலகம் முழுவதும் நல்ல தருமதேவதையும்; வழுஇலர் மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும்- தவறுதல் இல்லாத வேதமும் உன்னால் (நீ மருந்து கொண்டு வந்தால்) வாழ்ந்தன ஆகும்; இறைபொழுது தாழாது என்சொல் நெறிதரக்கடிது போதி - ஆதலால் சிறிது போழ்தும் காலந்தாழ்த்தாது என்சொல் நினக்கு வழியைக் கொடுக்க விரைந்து செல்வாயாக. |