பக்கம் எண் :

66யுத்த காண்டம் 

17. அதிகாயன் வதைப் படலம்

அதிகாயனது   இறப்பைக் கூறும் படலம் இது. இராவணன் மக்கள்
மூவர்.  அக்ககுமாரன், அதிகாயன் இந்திரசித்தன் என்பவர் அவர்கள்.
அதிகாயன்  -  இராவணனுக்கும்  தானிய  மாலிக்கும்  பிறந்த மகன்.
அதிகாயன்   என்ற   சொல்லுக்குப்  பெருந்தோற்றம்  உள்ள  உடல்
படைத்தவன்  என்ற  பொருள். காயம் - உடம்பு. அதி - மிகப்பெரிய
என்க.

கும்பகருணன்  இறந்தமை கேட்டு அழுது அரற்றிச் சீதை இருக்கும்
அசோக  வனம்  விட்டுப்  போன  இராவணன் தன் தம்பியைக் காக்க
முடியாது   சாகவிட்ட  அரக்கர்களைப்  பார்த்துச்  சினந்து  பலவாறு
பேசுகிறான்.  உங்களால்  முடியாவிடில்  சொல்லுங்கள். நானே சென்று
என்  வேலால்  சிறு  தொழில்  மனிதரைக்  கொல்வேன்  என்கிறான்.
அப்போது  அதிகாயன்  மானமும் சீற்றமும் மிக்கெழத் தான்  சென்று
பகை  முடித்து  வருவதாகக்  கூறுகிறான்.  உன்  தம்பியைக்  கொன்ற
இராமனுக்கு     அவன்     தம்பியைக்    கொன்று     அவலத்தை
உண்டாக்குவேன் என்று வஞ்சினம் கூறி அரக்கர்  பெரும் படை சூழப்
போருக்குச்   செல்லுகிறான்.   போர்க்களத்தில்  தலையற்றுக்  கிடந்த
கும்பகருணனைப்  பார்த்து  அவலித்த  அதிகாயன்,  தன்  சபதத்தை
நிறைவேற்ற  எண்ணி மயிடன் என்பவனைத் தூதுவனாக  இராமனிடம்
அனுப்பினான்.  வீடணன் அதிகாயனின்  பெருவீரத்தைக் குறிப்பிட்டுப்
போருக்குச்  செல்லும் இலக்குவனுடன்  தானும் போர்க்களம்  வந்தான்.
தொடர்ந்து  நடந்த  பெரும்  போரில்  இலக்குவன்  பிரமாத்திரத்தால்
அதிகாயனைக்  கொன்றான். அதிகாயன் வீரப்  போர் புரிந்த திறத்தை
இப்படலம்   விளக்குகிறது.   அவனது   மரணச்   செய்தி    கேட்ட
இராவணனது  வருத்தம்,  சினம்,  அதிர்ச்சி ஆகியவையும்.  தாயாகிய
தானியமாலியின்   அவலப்   புலம்பலும்,   இலங்கையர்    துயரமும்
இப்படலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகள் ஆகும்.

                                இராவணன் அமைச்சரைக் கடிதல்

7727.கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற,
எழுந்து எரி வெகுளியான், இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரைச் சுளித்து நோக்குறா,

மொழிந்தனன், இடியொடு முகிலும் சிந்தவே.