கொழுத்து விட்டு அழன்று எரி - கொழுத்து விட்டு வெப்பத்தோடு எரிகின்ற; மடங்கல் கூட்டு அற - ஊழித்தீயையும் ஒப்பென்று சொல்லா அளவு; எழுந்து எரி வெகுளியான் - மேன் மேலும் எழுந்து எரிகின்ற சினத்தை உடையவன் ஆகிய இராவணன்; இரு மருங்கினும் தொழும் தகை அமைச்சரை - (தன்) இரு பக்கத்திலும் இருந்து தொழுகின்ற தன்மை உள்ள அமைச்சர்களை; சுளித்து நோக்குறா - மிக்க சினத்தோடு பார்த்து; இடியொடு முகிலும் சிந்த மொழிந்தனன் - இடியோடு மேகங்களும் சிதறிக் கீழே விழுமாறு பெருங்குரல் படப் பேசலானான்.
|
இராவணன் அமைச்சரைப் பார்த்து மிகச் சினந்து இடியோடு முகிலும் சிந்திச் சிதற வெடிபடப் பேசினான். மடங்கல் - ஊழித்தீ. கூட்டு - ஒப்பு, சுளித்து - சினந்து, முகம் சுளித்து எனினுமாம். ஏகாரம் இசைநிறை.
|
(1)
|
7728. | ‘ஏகுதிர், எம் முகத்து எவரும்-என்னுடை யோக வெஞ் சேனையும், உடற்றும் உம்முடைச் சாகரத் தானையும், தழுவச் சார்ந்து, அவர் வேக வெஞ் சிலைத் தொழில் விலக்கி வீட்டிரால்.
|
என்னுடை யோக வெஞ்சேனையும் - என்னுடைய சூழ்ச்சித் திறம் மிக்க கொடிய படையும்; உம்முடைச் சாகரத்தானையும் - உங்களுடைய கடல் போல் பரந்த பெருஞ்சேனையும்; தழுவச் சார்ந்து - ஒன்றாகச் சேர்ந்து; அவர் உடற்றும் - அப்பகைவர்கள் மாறுபட்டுச் செய்யும்; வேக வெஞ்சிலைத்தொழில் விலக்கி வீட்டிரால் - மிகு வேகத்தோடு கூடிய கொடுமையான வில்லின் தொழிலை விலக்கி மீளத்தக்கவர் அல்லர் ஆயினீர்; எவரும் எம் முகத்து ஏகுதிர் - (அதனால்) யாவரும் என் முகத்து எதிரில் நிற்காமல் (அப்பால்) சென்று விடுங்கள்.
|
யோகம் - சூழ்ச்சி, ஏகுதிர் - முன்னிலைப் பன்மை வினை முற்று, சாகரத்தானை - உவமைத்தொகை. ஆல் - அசை.
|
(2)
|
7729. | ‘"எடுத்தவர் இருந்துழி எய்தி, யாரையும் படுத்து, இவண் மீடும்" என்று உரைத்த பண்பினீர்! தடுத்திலீர் எம்பியை; தாங்ககிற்றிலீர்; கொடுத்திலீர், உம் உயிர்; வீரக் கோட்டியீர். |