அரக்கரின் ஊர்க்கு வர இசையவில்லை ஆதலால்; கடவுள் ஓங்கல்தான் வான்தனில் நின்றது - தெயவ்த்தன்மையுள்ள மருத்துமலை வானில் தனியே நின்றுவிட; அனுமன் எய்தினான் - அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான். |
(99) |
மருத்துமலையின் காற்றால் யாவரும் உயிர்பெற்று எழுதல் |
| 8802. | காற்று வந்து அசைத்தலும்,-கடவுள் நாட்டவர் போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர்- ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார், கூற்றினை வென்று, தம் உருவும் கூடினார். |
காற்று வந்து அசைத்தலும் - (வானில் நின்ற மருத்து மலையின்) காற்று வந்து (தம் உடம்பின் மேல்) வீசுதலும்; கடவுள் நாட்டவர் போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் - அமரர் நாட்டவர்கள் போற்றுமாறு அவர்க்கு விருந்தாய் மகிழ்ந்து தங்கியிருந்த வானர வீரர்களாகிய புண்ணியவான்கள்; ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்’ - உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்; கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் - யமனை வெற்றி கண்டு தமது பழையவானர உருவத்துடன் இயைந்தனர். |
(100) |
| 8803. | அரக்கர்தம் ஆக்கைகள் அழிவு இல் ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய, கண்டன மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன; குரக்குஇனம் உய்ந்தது கூற வேண்டுமோ? |
அரக்கர் தம் ஆக்கைகள் - அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல் ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய - அழிலில்லாத ஆழ்கடலில் (மருத்தனால் எறியப்பட்டு) மறைந்து ஒழிந்தனபோக; கண்டன மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன - காணப்பட்டனவாகிய (பட்ட) மரக்குலம் முதலிய ஓருயிர்ப் பொருள்களும் உயிர்பெற்று வாழலாயின என்றால்;குரக்கு இனம் உய்ந்தது கூற வேண்டுமோ - (ஐயறிவுயிராகிய) குரங்கினம் உயிர் பெற்றது பற்றிக் கூறவும் வேண்டுமோ? |
(101) |