| 8804. | கழன்றன, நெடுங் கணை; கரந்த புண்; கடுத்து அழன்றில குளிர்ந்தன, அங்கம்; செங் கண்கள் சுழன்றன; உலகு எலாம் தொழுவ; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான். |
கழன்றன நெடுங்கணை கரந்த புண் - உடம்பில் தைத்திருந்த நீண்ட அம்புகள்தாமே கழன்று வீழ்ந்தன; அவற்றாலாகிய புண்களெல்லாம் தாமே மறைந்தன; கடுத்து அங்கம் அழன்றில குளிர்ந்தன - வலிமிகுந்திருந்த அங்கங்கள் அழற்சி இன்றிக் குளிர்ந்தன; செங்கண்கள் சுழன்றன - (கோபத்தால்) சிவந்திருந்த கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ - உலகனைத்தும் தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான் - மாலை போன்று சுருண்ட அழகிய மயிர் முடியை உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான். |
(102) |
| 8805. | யாவரும் எழுந்தனர்; ஆர்த்த ஏழ் கடல் தாவரும் பேர் ஒலி செவியில் சார்தலும்,- தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செங் கணான் யோகம் நீங்கினன் என,-இளவல் ஓங்கினான். |
யாவரும் எழுந்தனர் - வானரர் யாவரும் உயிர் பெற்று எழுந்தனராய்; ஆர்த்த, ஏழ்கடல் தாவரும் பேர்ஒலி செவியில் சார்தலும் - ஆரவாரித்த ஏழுகடலின் ஒலி போன்ற கெடுதலில்லாதபெரிய ஆரவாரம் தன் செவியில் சேர்ந்தவுடன்; தேவர்கள் வாழ்த்தொலிகேட்ட செங்கணான் - தேவர்களுடைய வாழ்த்தொலியைக் கேட்ட சிவந்த கண்களை உடைய திருமால்; யோகம் நீங்கினான் என இளவல் ஓங்கினான் - யோக நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான். |
(103) |
இராமன் தம்பியைத் தழுவித் துயர் தீர்தல் |
| 8806. | ஓங்கிய தம்பியை, உயிர் வந்து உள் உற வீங்கிய தோள்களால் தழுவி, வெந் துயர் நீங்கினன், இராமனும்; உலகில் நின்றில, தீங்கு உள; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர். |