உயிர் வந்து உள் உற ஓங்கிய தம்பியை - உயிர் வந்து உடம்பினுள் பொருந்தியதினால் உணர்வு பெற்ற எழுந்த தம்பி இலக்குவனை; இராமனும் வீங்கிய தோள்களால் தழுவி வெந்துயர் நீங்கினான் - இராமனும் தன் பூரித்த தோள்களால் தழுவிக் கொண்டு கொடிய துன்பம் நீங்கப் பெற்றான்; உலகில் உள தீங்கு நின்றில - உலகில் தீங்காக உள்ளன எல்லாம் நில்லாமல் சென்றன; தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் - தேவர்களும் கலக்கம் நீங்கினார்கள். |
(104) |
8807. | அரம்பையர் ஆடினர்; அமிழ்த ஏழ் இசை, நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின; உலகு எலாம் உவகை நெய் விழா பரம்பின; முனிவரும் வேதம் பாடினார். |
அரம்பையர் ஆடினர் - அரம்பையர்கள் ஆடினர்; அமிழ்த ஏழ்இசை நரம்பு இயல் கின்னரம் முதல நன்மையே நிரம்பின - அமிழ்தம் போன்ற இனிய ஏழிசையை யெழுப்புகின்ற நரம்பினாலியன்ற கின்னர முதலிய இசைக்கருவிகளின் ஒலி (உலகெலாம்) நிரம்பின;உலகு எலாம் உவகை நெய்விழா பரம்பின - உலகெங்கும் மகிழ்ச்சியால் செய்யும் நெய்யாடல் விழா பரவின; முனிவரும் வேதம் பாடினார் - முனிவர்களும் வேதம் பாடினார்கள். |
(105) |
8808. | வேதம் நின்று ஆர்த்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன; புகழும் ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன; ஓத வேலையின் சீதம் நின்று ஆர்த்தன, தேவர் சிந்தனை. |
வேதம் நின்று ஆர்த்தன - வேதங்கள் மகிழ்ச்சியோடு நின்று ஆரவாரித்தன; வேத வேதியர் போதம் நின்று ஆர்த்தன - வேதம் பயின்ற அந்தணர் தம் அறிவு நிலைபெற்று ஆரவாரித்தன; புகழும் ஆர்த்தன; ஓதம் நின்று ஆர்த்தன - புகழும் ஆரவாரித்தன; கடல்கள் நின்று ஒலி செய்தன; ஓத வேலையின் தேவர் சிந்தனை சீதம் நின்று ஆர்த்தன - அலைகளோடு கூடிய கடலைப்போல் தேவர்களின் சிந்தனையும் குளிர்ச்சியோடு நின்று ஆரவாரித்தன. |
(106) |