அயன்படை அகலுதல் |
| 8809. | ‘உந்தின பின் கொலை ஒழிவு இல் உண்மையும் தந்தனை நீ; அது நினக்குச் சான்று’ எனா, சுந்தரவில்லியைத் தொழுது, சூழ வந்து, அந்தணன் படையும் நின்று, அகன்று போயதால். |
கொலை உந்தினபின் - கொலை நீங்கின பின் (யாவரும் உயிர் பெற்றெழுந்தபின்); அந்தணன் படையும் சுந்தர வில்லியை சூழவந்து தொழுது நின்று - பிரமாத்திரமும் அழகிய வில்லாளனான இராமனைச் சுற்றி வந்து வணங்கி, எதிர்நின்று; நீ ஒழிவு இல் உண்மையும் தந்தனை - நீ, நீங்குதலில்லாத சத்தியத்தையும் தந்தாய்; அது நினைக்குச் சான்று எனா அகன்று போயதால் - அது உனக்குப் பெருமையே எனக் கூறி நீங்கிச் சென்றது. |
ஆல் - அசை. ‘பிரமபாணம் இராமனை வணங்கி வாழ்த்திச் சென்றது என்றவாறு. |
(107) |
சந்தக் கலிவிருத்தம் |
| 8810. | ஆய காலையின், அமரர் ஆர்த்து எழ, தாயின் அன்பனைத் தழுவினான்,-தனி நாயகன், பெருந் துயரம் நாம் அற, தூய காதல் நீர் துளங்கு கண்ணினான். |
ஆயகாலையின் தனி நாயகன் - அது போழ்து ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; பெருந்துயரம் நாம் அற - (முன்பிருந்த) பெருந்துயரமும் அச்சமும் ஒழிதலால்; தூயகாதல் நீர் துளங்கு கண்ணினான் - தூய்மையான அன்புக் கண்ணீர்தளும்பும் கண்களை உடையவனாய்;தாயின் அன்பனை அமரர் ஆர்த்தெழத் தழுவினான் - தாய் போன்ற அன்பனாகிய அனுமனைத் தேவர்கள் மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழாநிற்கத் தழுவிக் கொண்டான். |
நாம் - அச்சம். இராமனுடைய துயரமும் அச்சமும் அகன்றதால் ‘தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்” என்றார். அறம் தழைக்க அனைவரும் உயிர்த்தெழவும், உலகம் உய்யவும் காரணமாயிருந்தமையின் அனுமன் “தாயின் அன்பன்” எனப்பட்டான். |
(108) |