பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 699

8811.எழுது குங்குமத் திருவின் ஏந்து கோடு
உழுத மார்பினான், உருகி, உள் உறத்
தழுவி நிற்றலும், தாழ்ந்து, தாள் உறத்
தொழுத மாருதிக்கு, இனைய சொல்லினான்:
 

எழுது  குங்குமத் திருவின்  ஏந்துகோடு  உழுதமார்பினான் -
(தொய்யிற்கோலமாக)   எழுதிய  குங்குமத்தினை  உடைய திருமகளின்
அமிசமான   சீதையின்    உயர்ந்த   யானைக்   கொம்பு   போன்ற
தனங்களால் உழப்பட்ட மார்பினை உடைய இராமன்; உருகி உள்உறத்
தழுவி  நிற்றலும்
 - உருகி மனம் பொருந்தத் தழுவி நின்ற அளவில்;
தாள்உறத் தாழ்ந்து  தொழுத   மாருதிக்கு  -  அவன்  பாதத்தில்
பொருந்துமாறு    தாழ்ந்து    வணங்கிய    அனுமனுக்கு;   இனைய
சொல்லினான்
- இத்தன்மையான சொற்களைச் சொன்னான் (இராமன்).
 

                                                (109)
 

                 இராமன் அனுமனைப் புகழ்ந்து, வாழ்த்துக் கூறுதல்
 

8812.‘முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது,
என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்;
நின்னின் தோன்றினோம், நெறியின் தோன்றினாய்!
 

முன்னின் தோன்றினோர் முறையில்  நீங்கலாது  -  முன்  எம்
குலத்தில்   தோன்றினோரது    முறைமையினின்றும்   நீங்காமலிருந்து;
என்னின் தோன்றிய துயரின் - என்னால் தோன்றிய துயரின்; ஈறுசேர்
மன்னின்  முன்னம்  தோன்றினோம்
- இறந்த தசரத மன்னனிடத்தில்
முன்னம்  தோன்றினோம்;   மாண்டுளோம் - (பின்பு பிரமாத்திரத்தால்)
இறந்துபட்டோம்;நெறியின் தோன்றினாய் நின்னின் தோன்றினோம்
- நன்னெறியில்   விளங்குபவனே!   (இப்போது)   நின்னால்  மீண்டும்
பிறந்தவர்களானோம்.
 

முன்னில்     தோன்றினோர் முறை - வாய்மை தவறாமை. என்னில்
தோன்றிய   துயர் - காடு நோக்கித்தான்  பிரிந்ததால் ஆயதுயர். ஈறு -
இறுதி.  ஈறுசேர்   மன்னன்  -  தயரதன்.  “முன்பு   தயரதமன்னனின்
மக்களாகப்   பிறந்த நாங்கள்  மாண்டுவிட்டோம். இப்பொழுது நின்னில்
தோன்றியுள்ளோம்” என அனுமனை இராமன் பாராட்டுகின்றான்.
 

                                                (110)