பொய்க்குமால் - பொய் மனத்தவராகிய பகைவர் இறத்தல் பொய்த்துவிடும். (இறந்த அரக்கர் மீண்டும் உயிர் பெறுவர் என்றபடி); மொய்த்த குன்றை அம்மூல ஊழிவாய் வைத்து மீடியால் - (ஆதலால்) மருந்துகள் நெருங்கி உள்ள இம்மலையினை அந்தப் பழைய இடத்தில் வைத்து விட்டுத் திரும்புவாயாக. |
என்று சாம்பவன் இயம்ப என அடுத்த செய்யுளில் முடியும். மீள்தி என்பது மீடி எனத் (ளகரத்தோடு தகரத்திற்கு மயக்கவிதி இன்மையால்) திரிந்து நின்றது. |
  (115) |
8818. | என்று சாம்பன் ஆண்டு இயம்ப, ‘ஈதுஅரோ நன்று, சால!’ என்று, உவந்து, ‘ஒர் நாழிகைச் சென்று மீள்வென்’ என்று எழுந்து, தெய்வ மாக் குன்று தாங்கி, அக் குரிசில் போயினான். |
என்று சாம்பவன் ஆண்டு இயம்ப - என்று சாம்பவன் அங்கு சொல்ல; ஈது அரோ சால நன்று என்று உவந்து - ‘இது மிகவும் நல்லது’ என்று மகிழ்ந்து;‘ஒர் நாழிகைச் சென்று மீள்வென்’ என்று எழுந்து - ‘ஓர் நாழிகையிலே சென்று திரும்புவேன்’ என்று எழுந்து; தெய்வமாக் குன்று தாங்கி அக்குரிசில் போயினான் - தெய்வத்தன்மையுடைய பெரிய மருத்துமலையைத் தாங்கிக் கொண்டு அந்த அனுமன் போயினான். |
அரோ - அசை ஈது சால நன்று என இயையும். குரிசில் - ஆண்மகன். |
  (116) |