24, களியாட்டுப் படலம் | மேகநாதனின் பிரமாத்திரத்தால் பகைவர் மடிந்தனர் எனக் கேள்வியுற்ற இராவணன் பெருமகிழ்ச்சி கொள்ளுகின்றான். அதன்விளைவாக மகளிரைக் கள்ளுண்டு களி வெறியோடு ஆடவைத்துப் பார்க்க விரும்புகின்றான். அங்ஙனம் மகளிர் கள்ளை உண்டு ஆடிய ஆடலைப் பற்றிக் கூறுகின்ற பகுதியாதலின் இது களியாட்டுப் படலம் எனப் பெயர் பெறுகின்றது. | இப்படலப் பெயர், ‘களியாட்டப் படலம்’ எனவும் சில சுவடிகளில் காணப்படுகின்றது. இப்பகுதி கம்பரே அமைத்துக்கொண்ட பகுதியாகும், வான்மீகத்தில் இது இல்லை. | அறுசீர் ஆசிரிய விருத்தம் | பகை ஒழிந்தது என்று உவந்த இராவணன் மகளிரின் களியாட்டம் காணுதல் | 8819. | இன்னது இத் தலையது ஆக, இராவணன் எழுந்து பொங்கி, தன்னையும் கடந்து நீண்ட உவகையன், சமைந்த கீதம் கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டைக் கன்னி நன் மயில் அன்னாரை நெடுங் களியாட்டம் கண்டான். | இன்னது இத்தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி - இங்ஙனம் இராமன் சேனையில் இவ்வாறு நிகழாநிற்க, இராவணன் (பகை அழிந்தது என்ற எண்ணத்தல்) எழுச்சி கொண்டு கிளர்ச்சிமிக்கு; தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் - தன்னையும் கடந்து பெருகிய மகிழ்ச்சியுடையவனாய் முறைப் படி அமைந்த இசையை; கின்னரர் முதலோர் பாட, முகத்திடைக் கிடந்த கெண்டை - கின்னரர் முதலியோர் பாடா நிற்க, முகத்தில் கிடந்த (கண்ணாகிய) கெண்டை மீன்களை உடைய; கன்னி நன் மயில் அன்னாரை நெடுங்களியாட்டம் |
|
|
|