| பூந் துகிலோடும் பூசல் மேகலை, சிலம்பு பூண்ட மாந் தளிர் எய்த, நொய்தின் மயங்கினர்-மழலைச் சொல்லார். |
கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் - கூந்தலாகிய - அழகிய சுமையான திரண்ட சுருள் தன்மையுடைய அழகு செய்யப்பட்ட மேகம்; ஏந்து அகல் அல்குல்தேரை இகந்து போய் இறங்க - பக்கம் உயர்ந்த விரிந்த அல்குல் ஆகிய தேரையும் கடந்து கீழ் இறங்கவும்; யாணர்ப் பூந்துகிலோடும் பூசல் மேகலை - புதிய பூந்துகிலோடு, ஆரவாரிக்கும் மேகலையும் (கழன்று); சிலம்பு பூண்ட மாந்தளிர் எய்த மழலைச் சொல்லார் நொய்தின் மயங்கினர் - சிலம்பு பூண்டுள்ள மாந்தளிர் போன்ற பாதத்தை அடையவும் மழலை மொழியினை உடைய மகளிர் விரைவில் மயங்கினார்கள். |
  (8) |
8827. | கோத்த மேகலையினோடும் துகில் மணிக் குறங்கைக் கூட, காத்தன, கூந்தற் கற்றை, அற்றம், அத் தன்மை கண்டு- வேத்தவை, ‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார்; மேலோர் சீர்த்தவர் செய்யத் தக்க கருமமே செய்தார்’ என்ன. |
வேத்தவை - வேந்தனாகிய இராவணனின் அவையில் உள்ளோர்; ‘கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் - கீழ் உள்ளவர்கள் கீழ்மையே செய்தார்கள்; மேலோர் சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே செய்தார் என்ன - மேலுள்ளவர்கள் சிறந்தவர் செய்யத்தக்க நற்செயலையே செய்தார்கள் என்று புகழுமாறு; மணிகோத்த மேகலையினோடும் துகில் குறங்கைக் கூட - மணிகள் கோத்துள்ள மேகலையினோடு இடையில் அணிந்துள்ள துகில் அவிழ்ந்து அற்றங்காட்டித் துடையை அடைய; அத்தன்மை கண்டு கூந்தற் கற்றை அற்றம் காத்தன - அத்தன்மை கண்டு (தலை மேலுள்ள) கூந்தல் திரள் அவிழ்ந்து வீழ்ந்து அவர் அற்றத்தை மறைத்துக் காத்தன. |
மேற்பாடலின் விளக்கமாக இப்பாடல் அமைகின்றது. "அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்" (குறள்-980) |