25, மாயா சீதைப் படலம் | இந்திரசித்து மாயையினால் சீதை போன்ற உருவமொன்றனைச் சமைத்து அதனை அனுமனின் முன்னால் வெட்டிக் கொன்றதையும் அதனால் விளைந்தவற்றையும் கூறும் படலம் எனவிரியும். | மருந்து மலையைக் கொண்டுவந்து இந்திரசித்துவின் பிரமாத்திரத்தினால் மாண்டவர்களை எழுப்புகின்றான் அனுமன். களியாட்டங் கண்டு மகிழ்ந்திருந்த இராவணன் அதனை உணர்ந்து திடுக்கிட்டவனாய் மந்திராலோசனைச் சபையை அடைகின்றான். மாலியவான், இந்திரசித்து முதலானோர் மந்திரா லோசனையில் பங்குபெறுகின்றனர். மாலியவான் கூறும் உறுதி மொழிகள் பயன்படாமல் போகவே, இந்திரசித்து தான் நிகும்பலை என்னுமிடத்தில் வேள்வி செய்து முடித்தால் பகைவரைவென்று விடலாமெனக் கூறி, அதனைப் பகைவர் அறியாதவாறு இயற்ற வேண்டுமென்று கூறுகின்றான். சிந்தனைக்குப்பின்பு, சீதைபோன்று ஒரு மாயா சீதையை உருவாக்கி அவளை அனுமனின் முன்பு வெட்டிக் கொன்று விட்டு அயோத்தி சென்று அங்குள்ளவர்களை அழிப்பதாகப் போக்குக் காட்டினால் பகைவர் கவனத்தைத் திசை திருப்பலாம் என அவனே யோசனை கூறுகின்றான். அந்த யோசனை நிறைவேற்றப்படுகின்றது. ஆனால் இம்மாயையை வீடணன் கண்டுணர்ந்து நிகும்பலை வேள்வி அழியவும் இந்திரசித்துவுக்கு இறுதி ஏற்படவும் வழி வகுக்கின்றான். இச்செய்திகள் இப்படலத்துக் கூறப்படுகின்றன. | இராவணன் மந்திராலோசனை நிலைமையைக் கூறுதல் | 8840. | மைந்தனும், மற்றுளோரும் மகோதரன் முதலோர் ஆய தந்திரத் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க மந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். | மைந்தனும், மற்றுளோரும் - இந்திரசித்தம், ஏனைய உறவினர்களும்; மகோதரன் முதலோர் ஆயந்தந்திரத் தலைமையோரும் முதியரும் - மகோதரன் முதலான சேனைத் தலைவர்களும், மூத்தோராக உள்ள பெரியோர்களும்; தழுவத்தக்க |
|
|
|