பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 729

சந்தக் கலிவிருத்தம்
 

8859.எண்ணின கோடிப் பல் படை யாவும்,
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்,
வெண் நிற மேகம் மின்இனம் வீசி
நண்ணின போல்வ, தொல் நகர் நாண.
 

எண்ணின்   கோடிப் பல்படையாவும் - எழுபது வெள்ளம் என்று
கணக்கிடப்   பட்ட     கோடிக்கணக்கான   வானரப்படைகள்  யாவும்;
மண்ணுறு  காவல்  திண்மதில்  வாயில்  - அழகு செய்யப்பெற்றதும்,
காவலை  உடையதுமாகிய    திண்மையான  மதிலின்  வாயில் வழியாக;
வெண்நிற  மேகம்  மின் இனம்  வீசி  -  வெண்மையான  நிறத்தை
உடைய  மேகங்கள் மின்னல்களை வீசிக் கொண்டு; தொல் நகர் நாண
நண்ணின  போல்வ
- பழைமையான அந்த இலங்கை நகர் நாணும்படி
நெருங்கின போல்வனவாயின.
 

                                                  (20)
 

8860.ஆசைகள்தோறும் அள்ளின கொள்ளி,
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்,
‘நாசம் இவ் ஊருக்கு உண்டு’ என, நள்ளின்
வீசின, வானின் மீன் விழும் என்ன.
 

மாசு அறுதானை மர்க்கடவெள்ளம் - குற்றம் அற்ற சேனையாகிய
வானர வெள்ளம்; ஆசைகள் தோறும் கொள்ளி அள்ளின - திசைகள்
தோறும்  கொள்ளிக்கட்டைகளை அள்ளி; இவ் ஊருக்கு நாசம் உண்டு
என
 -  இவ்வூருக்கு   அழிவு  உண்டு  என்று குறிக்க; வானின் மீன்
விழும்   என்ன  நள்ளின்   வீசின
  -  வானத்திலிருந்து  மீன்கள்
விழுகின்றன என்னும் படியாக நள்ளிரவில் (அக்கொள்ளிகளை) வீசின.
 

‘வானிலிருந்து     விண்மீன்  விழுதல்   அரசுக்கு  அழிவு  எனும்
நம்பிக்கை’ இங்கு குறிக்கப்பட்டதெனினும் அமையும்.  உற்பாதம் போல
அமைந்தது என்று தற்குறிப்பேற்ற உவமையாம்.
 

                                                  (21)
 

8861.வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை,
குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி,
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செஞ் சரம் என்னச் சென்றன மென்மேல்.*