பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 73

தான் ஒத்தது சொல்லுதி; தா விடை’ என்-
றான்; இத் திறம் உன்னி அரக்கர் பிரான்,

சேனைக் கடலோடு இடை செல்க எனினும் - படைக் கடல் சூழ
இடையில்  (போருக்குச்) செல்க என்று கட்டளை இட்டாலும் தனி ஏகு
எனினும்
 -  அவ்வாறன்றித்  தனியாகவே  (போருக்குச்) செல் என்று
கட்டளை  இட்டாலும்;  யான்  இப்பொழுதே  -  நான் இக்கணத்தே
(அதுசெய்வேன்);    தான்   ஒத்தது   சொல்லுதி   -  இரண்டனுள்
பொருத்தமானதைச்  சொல்வாய்;  விடை தா என்றான் - விடை தருக
(என்று  அதிகாயன்) கூறினான்; இத்திறம் உன்னி அரக்கர் பிரான் -
இவ்வாறு   தன்   மகன்   கூறிய   தன்மையை   எண்ணி  அரக்கர்
தலைவனாகிய இராவணன் ஏவினனால் (15) என்பதோடு முடியும்.

தான்    - அசை, சேனைக்கடல் - உருவகம், செல்க - வியங்கோள்
வினைமுற்று.   தா   -  தாவென்  கிளவி  ஒப்போன்  கூற்று.  மகன்
தந்தையிடம் ஒப்போனாகப் பேசுவதால் இச்சொல் வந்தது.

                                                   (13)

7740.‘சொன்னாய், இது நன்று துணிந்தனை; நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின், யான்,

பின் நாள், அவ் இராமன் எனும் பெயரான்-
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால்.

நீ    துணிந்தனை  நன்று  இது  சொன்னாய்  -  நீ  மனத்தில்
துணிந்தனையாகி   நல்ல   சொற்களாகிய    இவற்றைச்   சொன்னாய்;
அன்னான்  உயிர்  தந்தனையாம்  எனின் - அந்த இலக்குவனுடைய
உயிரை  வாங்கித்  தந்தாய்  என்றால்;  யான்  பின்நாள் - நான் பின்
வருநாளில்;  அவ்  இராமன்  எனும் பெயரான்  -  அந்த  இராமன்
என்னும்   பெயர் கொண்டவனுடைய;  தன்  ஆர்  உயிர்  கொண்டு
சமைக்குவெனால்
 -  அருமையான  உயிரைக்  கொண்டு  (என்பகை)
முடிப்பேன்.

துணிந்தனை - முற்றெச்சம், ஆர் உயிர் - பண்புத்தொகை.

                                                   (14)

7741.‘போவாய் இதுபோது-பொலங் கழலோய்!-
மூவாயிர கோடியரோடு, முரண்
கா ஆர் கரி, பரி காவலின்’ என்று,
ஏவாதன யாவையும் ஏவினனால்