வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை - வஞ்வனை செய்த இராவணன் வாழ்கின்ற இலங்கையின் மீது; குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி - யானை போன்ற வானரவீரர் வீசிய கொள்ளிகள்; அஞ்சன வண்ணன் ஆழியில்ஏவும் - மைவண்ணனான இராமன் சினங்கொண்டு கடலின் மீது எய்த; செஞ்சரம் என்ன மென் மேல் சென்றன - சிவந்த அக்கினியாத்திரங்களைப் போல மேலும் மேலும் தொடர்ந்து சென்றன. |
(22) |
8862. | கை அகல் இஞ்சிக் காவல் கலங்க, செய்ய கொழுந் தீ சென்று நெருங்க, ஐயன் நெடுங் கார் ஆழியை அம்பால் எய்ய எரிந்தால் ஒத்தது, இலங்கை. |
கை அகல் இஞ்சிக் காவல் கலங்க - இடமகன்ற கோட்டை மதிற் காவல் கலங்குமாறு; செய்ய கொழுந் தீ சென்று நெருங்க - சிவந்த கொழுவிய நெருப்பானது சென்று நெருங்குவதால்; இலங்கை - இலங்கை நகரமானது; ஐயன் நெடுங்கார் ஆழியை அம்பால் - இராமன், நெடிய கருங்கடலைத் தனது கணைகளால்; எய்ய எரிந்தால் ஒத்தது - எய்த காலத்து எரிந்த தோற்றம் போல் காட்சியளித்தது. |
(23) |
8863. | பரம் துறு தொல் பழுவத்து எரி பற்ற, நிரல் துறு பல் பறவைக் குலம், நீளம் உரற்றின, விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் அரற்றி எழுந்தது, அடங்க இலங்கை.* |
பரல் துறு தொல்பழுவத்து எரி பற்ற - பரற்கற்கள் நெருங்கியுள்ள பழமையான காட்டில் தீ பற்றிக் கொள்ள; நிரல் துறு பல் பறவைக் குலம் - வரிசையாக நெருங்கி வாழ்கின்ற பலபறவைக் கூட்டங்கள்; நீளம் உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் - தம் கூட்டின் முன்பு அரற்றினவாய்ப் பின்பு வானத்தில் ஒலித்துக் கொண்டு எழுந்தது போல; இலங்கை அடங்க அரற்றி எழுந்தது - இலங்கை நகர அரக்கர் கூட்டம் முழுவதும் புலம்பிக்கொண்டு எழுந்தது. |
நீளம் - கூடு. |
(24) |