என ஆராய்ந்து அறிந்தும்; கோதுஇல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் - குற்றமில்லாத குலத்தில் பிறந்த ஒப்பற்ற நீ குணங்களால் உயர்ந்தவன்! மாதை ஒறுத்தல் வசைத்திறம் அன்றோ - ஒரு பெண்ணைக் கொல்லுதல் என்பது பழிச் செயல் அல்லவோ? |
(32) |
8872. | ‘நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய்; நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்; பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ, மால் முகம் உற்று, ஒரு மாதை வதைத்தல்? |
நான் முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் - (நீ) பிரமனுக்கு ஒரு நான்காவது தலைமுறையினனாக வந்து பிறந்துள்ளாய்; நூல்முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய் - நூல்களில் உள்ள சிறந்த கருத்துகள் எல்லாவற்றையும் நுட்பமாக உணர்ந்துள்ளாய்; மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் - அறிவு மயங்கி ஒரு பெண்ணைக் கொல்லுதல்; பால்முகம் உற்ற பெரும் பழி அன்றோ - பகுக்கப்பெற்ற பழிகளில் முதன்மையான பெரிய பழியல்லவோ? |
(33) |
8873. | ‘மண் குலைகின்றது; வானும் நடுங்கிக் கண் குலைகின்றது; காணுதி, கண்ணால்; எண் குலைகின்றது இரங்கல் துறந்தாய்! பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ? |
மண் குலைகின்றது - (நீ செய்யும் செயலைக் கண்டு) மண்ணுலகம் நடுங்குகின்றது.; வானும் நடுங்கிக் கண் குலைகின்றது - வானுலகமும் நடுங்கிக்கண் குலைகின்றது; கண்ணால் காணுதி - இவற்றை நீ கண்ணால் காணுகின்றாய்; இரங்கல் துறந்தாய் - (இருப்பினும்) இரக்கம என்னும் பண்பினைக் கைவிட்டுவிட்டாய்! எண் குலைகின்றது - (இச்செயல் கண்டு) என் எண்ணமும் நடுங்குகி்ன்றது! பெண் கொலை செய்கை பெரும்பழி அன்றோ - பெண் கொலை செய்வது பெரும் பழிக்குக் காரணம் அல்லவா? |
(34) |