வஞ்சியை எங்கும் காணாது - வஞ்சிக் கொடி போன்ற சீதையை எங்கும் காணாமல்; உயிரினை மறந்தான் என்ன - தன் உயிரையே மறந்தவன் போல; தேடித்திரிகின்றான் செஞ்சிலை உரவோன் உள்ளம் தேற - தேடித்திரிகின்றவனாகிய செம்மையான வில்லாற்றல் மிக்க வீரனாகிய இராமன் மனம் தெளியும்படி; “அம்சொலாள் இருந்தாள் கண்டேன்” என்ற யான் - ‘அழகிய சொல்லை உடைய சீதை இருந்தாள், (இலங்கையில்) கண்டேன்” என்று கூறி மகிழ்வித்த நான்; ‘அரக்கன் கொல்லத் துஞ்சினாள்’ என்றும் சொல்ல - இப்போது ‘அரக்கனாகிய இந்திரசித்து கொல்லச் சீதை இறந்தாள்’ என்று சொல்லவும்; தோன்றினேன் தோற்றம் ஈதால் - தோன்றினேன், என்பிறப்பின் பயன் இத்தகையதாயிற்றே! |
8889. | ‘அருங் கடல் கடந்து, இவ் ஊரை அள் எரி மடுத்து, வெள்ளக் கருங் கடல் கட்டி, மேருக் கடந்து ஒரு மருந்து காட்டி, “குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல்” என, களிப்புக் கொண்டேன்; பெருங் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது, என் அடிமைப் பெற்றி! |