வருடலோடும் - அழகிய மலர் போன்ற அவன் திருவடிகளையும் கைகளையும் உடம்பையும் தன் கையால் பற்றித் தடவிக்கொடுத்த அளவில்; வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல - வேதங்களாலும் காண முடியாத வள்ளல் தன்மையுடையவனாகிய இராமன் கண்களை மெல்ல விழித்தான். | போதம் - உணர்வு. வீடணனால் தீண்டற்கரிய மேனி என்பதனைச் சேவகன் மேனிதீண்டி என்பதனாற் குறிப்பித்தார். வேதமும் காண முடியாதவனாகிய பிரான் அரக்கர் குலத்தில் தோன்றியவனாயினும் தன் அன்பனாகையால் அவனுக்கு எளிவந்து, பொன்பூம்பாதமும் கையும், மெய்யும் பற்றி வருடக் கிடந்து அத்தொண்டினை ஏற்கவே மயங்கினன் போல விழித்தெழுந்த கருணை நோக்கி, “வள்ளல் விழித்தனன்” என்றார். இவ்வுபசாரங்களை இவக்குவன் செய்தனன் எனக் கூறுவாரும் உளர். மூல நூலில், இவ்வுபசாரங்களைத் துயருற்று அங்கு வந்த தேவர்கள் செய்தனர் எனக் கூறப் பெற்றுள்ளது | (61) | இலக்குவன் பேச்சு | 8901. | ‘ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து, உற்றது எண்ணி, ஆற்றுவான் அல்லன் ஆகி, அயர்கின்றான்எனினும், ஐயன், மாற்றுவான் அல்லன்; மானம் உயிர் உக வருந்தும்’ என்னா, தேற்றுவான் நினைந்து, தம்பி இவை இவை செப்பலுற்றான்: | தம்பி ஊற்றுவார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி - இலக்குவன் ஊற்றெனப் பெருகிவருகின்ற கண்ணீரோடு உள்ளம் அழிந்து தமக்கு நேர்ந்ததை எண்ணி; ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் - ஆற்றுதற்கியலாதவனாய் வருந்துகின்றான் என்றாலும்; ஐயன் மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா - இராமன் பகைவரை அழிக்கமாட்டான், மான உணர்வு காரணமாக உயிர் நீங்குமாறு வருந்துவான் என; தேற்றுவான் நினைந்து இவை இவை செப்பலுற்றான் - அவனைத் தேற்றுவதற்கு எண்ணி இவ்விவற்றைக் கூறத் தொடங்கினான். | (62) |
|
|
|