தமக்கு எதிரிலேயே கொண்டுவந்து; வாளின் கொன்றவர் தம்மைக் கொல்லும் கோள் இலர் - வாளினால் கொன்ற அரக்கரைக் கொல்லும் வலிமையில்லாதவர்கள்;நாணம் கூரப் பொன்றினர்’ என்பர் - நாணம் மிகுதலால் இறந்துபட்டார்கள்’ என்று உலகவர் பேசுவர்; பொதுமை பார்க்கின் இது கருமம் அன்று - நடுநிலையில் நின்று பார்த்தால் இங்ஙனம் துன்புறுவது நமக்குரிய செயல் அன்று; அறிவு இலாதவர்போல் நீ அயர்கின்றது என்? - (எல்லாம் உணர்ந்தநீ) அறியாதவர் போல் வருந்துவது எதற்காக?
(69)
சுக்கிரீவன் ‘அரக்கனைத் தாக்குவோம்’ எனல்
8909.
அனையன இளவல் கூற, அருக்கன் சேய், அயர்கின்றான், ஓர் கனவு கண்டனனே என்னக் கதுமென எழுந்து, ‘காணும் வினை இனி உண்டே? வல்லை, விளக்கின் வீழ் விட்டில் என்ன, மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும், நாம்; வம்மின்’ என்றான்.
(70)
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் - அத்தகைய சொற்களை இலக்குவன் சொல்லக் கேட்ட சுக்கிரீவன், துன்பத்தால் சோர்ந்து கிடக்கின்றவன்; ஓர் கனவு கண்டனனே என்னக்கதுமென எழுந்து - ஒரு கனவு கண்டவனைப் போல விரைந்து எழுந்து; ‘காணும் வினை இனி உண்டே? வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன - இனி ஆராய்ந்து பார்க்கும்செயலும் உண்டோ? விரைந்து விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சி என்று கூறும் படியான செயல்களை உடையவனாய்; மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்மின் என்றான் - இப்பொழுது தன் அரண்மனையின் கண்ணே உறையும் அரக்கனாகிய இராவணன மார்பில் குதிப்போம் வாருங்கள்” என்று கூறினான்.
8910.
‘இலங்கையை இடந்து, வெங் கண் இராக்கதர் என்கின்றாரைப் பொலங் குழை மகளிரோடும், பால் நுகர் புதல்வரோடும்,