இக் கணத்து அயோத்தி மூதூர் எய்துவென்; இடம் உண்டு என்னின், திக்குஅனைத்தினிலும் செல்வென்; யானே போய்ப் பகையும் தீர்வென்;
அக்கணத்து நின்றான் அனுமன் ‘ஐய! என் தோளின் ஆதல் - (இவ்வாறு இலக்குவன் கூற) அப்பொழுது அங்கு நின்றிருந்தவனான அனுமன் (இராமனை நோக்கி) ‘ஐயனே! என் தோள்களிலோ; கைத்துணைத் தலத்தே ஆதல் ஏறுதிர் - அல்லது இருகைத் தலங்களிலோ ஏறிக் கொள்ளுங்கள்; காற்றும் தாழ இக்கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் - காற்றும் விரைவில் பின்னிடுமாறு இந்தக் கணத்தில் அயோத்தி என்னும் பழமையான ஊரை அடைவேன்; இடம் உண்டு என்னின் திக்கு அனைத்திலும் செல்வென் - இடம் வாய்க்குமாயின் திசை எல்லாவற்றிலும் செல்வேன் யானே போய்ப்பகையும் தீர்வென் - (நீங்கள் விரும்பினால்) யானே தனித்துச் சென்று பகைவனையும் ஒழி்ப்பேன்.
(83)
8923.
‘கொல்ல வந்தானை நீதி கூறினென், விலக்கிக் கொள்வான், சொல்லவும் சொல்லி நின்றேன்; கொன்றபின், துன்பம் என்னை வெல்லவும், தரையின்வீழ்வுற்று உணர்ந்திலென்; விரைந்து போனான்; இல்லை என்று உளனேல், தீயோன் பிழைக்குமோ? இழுக்கம் உற்றான்!
கொல்லவந்தானை விலக்கிக் கொள்வான் நீதி கூறினென் - சீதையைக் கொல்லவந்த இந்திரசித்தை அச்செயலினின்றும் விலக்கிச் சீதையை உய்யக் கொள்வதற்காக நன்னெறிகளை எடுத்துக்கூறினேன்; சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்றபின் துன்பம் என்னை வெல்லவும் - இதமான சொற்களைப் பேசி நின்றேன் (அவற்றைக் கேளாமல் அவன் பிராட்டியைக்) கொன்ற பிறகு (பற்றிய) துன்பம் என்னை வெற்றி கொண்டதால்; தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் - தரையில் வீழ்ந்து உணர்விழந்தேன் (அப்போது அவ்விந்திரசித்து) விரைந்து போய்விட்டான்; இல்லை என்று உளனேல் தீயோன் பீழைக்குமோ?