பக்கம் எண் :

 மாயா சீதைப் படலம் 767

நெஞ்சினன்  ஆகி -   மிகப் பெரிய மகிழ்ச்சி தங்கிய மனத்தினனாய்;
உள்ளம்   தள்ளுறல்   ஒழிந்து   நின்றான்  -  (முன்பு  ஏற்பட்ட)
மனத்தடுமாற்றம்  நீங்கி    நின்ற  வீடணன்;  வெஞ்சிலை  மைந்தன்
போனான்
 -  கொடிய   வில்லை உடைய இந்திரசித்து அயோத்திக்குப்
போக்குக்  காட்டிப்  போனவன்;  நிகும்பலை  வேள்வியான் என்று -
நிகும்பலை  என்ற  கோயிலில்    வேள்வி செய்து கொண்டிருக்கின்றான்
என்று;   எஞ்சல்  இல்  அரக்கர்   சேனை   எழுந்து   எழுந்து
ஏகக் கண்டான்
-  குறைவில்லாத  அரக்கர்  சேனை  எழுந்து எழுந்து
அவ்விடத்திற்குப் போகக் கண்டான்.
 

                                                  (91)
 

8931.

‘வேழ்விக்கு வேண்டற்பால கலப்பையும், விறகும், நெய்யும்,
வாழ்விக்கும் தாழ்வில்’ என்னும் வானவர் மறுக்கம்
                                    கண்டான்,
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று!’ எனத் துணிவு
                                  கொண்டான்,
தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான்.
 

வேழ்விக்கு    வேண்டற்பால கலப்பையும் விறகும் நெய்யும் -
“வேள்விக்கு  வேண்டியனவான   கலவைப்   பொருள்களும்,  விறகும்,
நெய்யும்;  தாழ்வில்  வாழ்விக்கும்  என்னும் -  நம்மைத்  தாழ்வில்
வாழ்விக்கப்  போகின்றதே”  என்று;  வானவர் மறுக்கம் கண்டான் -
தேவர்கள் கலங்குதலையும் கண்டு; ‘சூழ்வித்த வண்ணம்’  ஈதோ  நன்று;
எனத்  துணிவு கொண்டான் - ‘இந்திரசித்து சூழ்ச்சி செய்த  வண்ணம்
இதுதானோ   நல்லது!’  எனத்  துணிவு  கொண்டவனாய்;   தாழ்வித்த
முடியன்   வீரன்  தாமரைச்   சரணம்  தாழ்ந்தான்
-  வணங்கிய
தலையினனாய்  இராமனுடைய   தாமரைமலர்  போன்ற   பாதங்களைச்
சேர்ந்தான்.
 

கலப்பை  - வேள்வியி்ல் தருகின்ற அவிசுக்காகக் கலக்கும் கலவைப்
பொருள்கள்.     மறுக்கம்   -    கலக்கம்,    மாயத்தால்   சீதையைக்
கொன்றதுபோல்  காட்டியதும்,   அயோத்திமேல்  போவதாகப் போக்குக்
காட்டியதும்,   நிகும்பலை   வேள்விக்காகவே   என்பான்   ‘சூழ்வித்த
வண்ணம் ஈதோ?”  என்றனன்.  ஈதோ  என்றது இதற்குத் தானோ என்ற
பொருளிலாம். வேள்வி எதுகை நோக்கி ‘வேழ்வி’ என ஆயிற்று.
 

                                                 (92)