வீடணன் வந்து, இராமனை வணங்கி நிலைமையை எடுத்துரைத்தல் | 8932. | ‘இருந்தனள், தேவி; யானே எதிர்ந்தனென், என் கண் ஆர; அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து, நிகும்பலை மருங்கு புக்கான்; முருங்கு அழல் வேள்வி முற்றி, முதல் அற முடிக்க மூண்டான்.’ | தேவி இருந்தனள் யானே என் கண் ஆர எதிர்ந்தனென்-“தேவி இருந்தனள் யானே என் கண்ணாரக் கண்டேன்; அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ - அருந்ததி அனைய கற்பினை உடைய சீதைக்கு அழிவும் வருவதுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து- இந்திரசித்து நம்மை வருந்தும் படியான மாயங்களைச் செய்து (போக்குக்காட்டிவிட்டு); நிகும்பலை மருங்கு புக்கான் - நிகும்பலை என்னும் கோயிலில் புகுந்து; முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் - (எல்லாவற்றையும் அழிக்க வல்ல) தீயில் செய்யப்படும் வேள்வியைச் செய்து முடித்து நம்மை அடியோடு அறும்படி அழிக்க மூண்டுளான்”. | (93) | 8933. | என்றலும், ‘உலகம் ஏழும், ஏழு மாத் தீவும், எல்லை ஒன்றிய கடல்கள் ஏழும், ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை அன்று’ என, ‘ஆகும்’ என்ன, அமரரும் அயிர்க்க, ஆர்த்து, குன்றுஇனம் இடியத் துள்ளி, ஆடின-குரக்கின் கூட்டம். | என்றலும், ‘உலகம் ஏழும் ஏழுமாத்தீவும் - என்று வீடணன் கூறியவுடன் ‘ஏழுஉலகங்களும், இவ்வுலகத்து ஏழுபெரிய தீவுகளும்; ‘எல்லை ஒன்றிய கடல்கள் ஏழும் - எல்லை பொருந்திய ஏழு கடல்களும்; ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை அன்று’ என ‘ஆகும்’ என்ன - ‘ஒரு சேர எழுந்து ஆரவாரிக்கும் ஓசை இதுவன்று’ எனவும், ‘அவ்வோசையே ஆகும்’ எனவும், அமரரும் அயிர்க்க குரக்கின் கூட்டம் - தேவர்களும் ஐயுறுமாறு குரங்கின் கூட்டம் ஆரவாரித்து; குன்று இனம் இடியத் துள்ளி ஆடின - மலைகளும் இடியுமாறு துள்ளிக்குதித்து ஆடின. | (94) |
|
|
|