26. நிகும்பலை யாகப் படலம் |
இந்திரசித்து போரில் வெற்றி பெறுதல் குறித்து ‘நிகும்பலை’ என்ற விடத்தில் அமைந்த கோயிலில் சென்று வேள்வி செய்தமையைப் பற்றிக் கூறும் படலம் ‘நிகும்பலை யாகப்படலம்’ எனப் பெயர் பெற்றுது. இது சில ஏடுகளில் நிகும்பலைப் படலம்’ என்வும், ‘நிகும்பலையாகப் படலம்’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளது. முதல் நூலில் ‘நிகும்பிலை’ என்றே உள்ளது. இச்சொல் இலங்கையின் மேற்குக் திசையிலுள்ள குகையினையும் அங்குள்ள பத்திர காளியையும் குறிக்கும் என வாசஸ்பதிய நிகண்டு கூறும். |
நிகும்பலையில் இந்திர சித்து தொடங்கிய வேள்வி முடியுமாயின் அவனை வெல்லுதல் யாராலும் இயலாதென்பதனை வீடணன் கூற, இராமன் இலக்குவனையும், வீடணனையும் அவ்யாகத்தை அழிக்க அனுப்புகின்றான், அவர்களும் அங்ஙனமே சென்று யாகத்தை அழிக்கின்றனர் என்ற செய்தி இப்படலத்தில் கூறப்படுகிறது. |
இராமன் வீடணனைப் புகழ்தல் |
8934. | வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன்தன்னை மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, ‘ஐய! தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு; மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால். |
வீரனும் ஐயம் தீர்ந்தான் - வீரனாகிய இராமனும், ஐயம் நீங்கப் பெற்றவனாய்; வீடணன் தன்னை மெய்யோடு - வீடணனைத் தான் உடம்புடனே; ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி - ஆர்வமும் உயிரும் ஒன்றும்படியாக இறுகத் தழுவிக்கொண்டு; ஐய! துன்பம் தீர்வது பொருளோ? - ஐயனே! (யான்) துன்பம் நீங்கப் பெறுவது அரிய செயலோ? நீ உளை, தெய்வம் உண்டு; மாருதி உளன் - நீ (துணையாக) உள்ளாய், தெய்வம் (துணை) உள்ளது; அனுமன் (நமக்குத் துணையாக) உள்ளான்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால் - (மேலும்) நாம் செய்த தவம் |