அம்பு நீ துரப்பாய்அல்லை; அனையது துரந்த காலை, உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி’ என்றான்.
தம்பியைத் தழுவி - (இராமன்) தன் தம்பியாகிய இலக்குவனைத் தழுவிக்கொண்டு; ‘ஐய! தாமரைத் தவிசின் மேலான் - ‘ஐயனே! (இந்திரசித்து) தாமரையை இருக்கையாகக் கொண்டுள்ள பிரமதேவனுடைய; வெம்படை தொடுக்கும் ஆயின் - வெம்மை பொருந்திய அம்பினை (உன்மேல்) தொடுத்து விடுவானாயின்; வீர! விலக்குமது ன்றி அம்பு நீ துரப்பாய் அல்லை - வீரனே! அப்பிரமாஸ்திரத்தை விலக்குவதற்காகவன்றி மற்று நின் அம்பினை (பிரமன் கணையை) (அவன்மேல்) செலுத்தா திருப்பாயாக; அனையது துரந்த காலை - அங்ஙனமின்றி நினது பிரமன் கணையை அவன் மீது விடுப்பாயின்; உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி’ என்றான் - (அவன் மட்டுமின்றி) வானுலகும், இவ்வுலகும் ஆகிய எல்லாம் அழிந்தொழியும். எனவே அதனை அங்ஙனம் செலுத்துதலைத் தவிர்ப்பாயாக என்று கூறினான்.
(3)
8937.
‘முக்கணான் படையும், ஆழி முதலவன் படையும், முன் நின்று ஒக்கவே விடுமே; விட்டால் அவற்றையும் அவற்றால் ஓயத் தக்கவாறு இயற்றி, மற்று, உன் சிலை வலித் தருக்கினாலே, புக்கவன் ஆவி கொண்டு, போதுதி-புகழின் மிக்கோய்!
புகழின் மிக்கோய் - மேம்பட்ட புகழினை உடையவனே! முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் - மூன்று கண்களையுடைய சிவபெருமானின் பாசுபதாத்திரம் மற்றும் சக்கரப் படையை உடைய திருமாலின் நாராயணாத்திரம் ஆகியவற்றை; முன்னின்று ஒக்கவே விடுமே விட்டால்- (அவ்விந்திரசித்து) முற்பட்டு நின்று ஒருசேர (உன்மேல்) ஏவுதல் கூடும், அங்ஙனம் ஏவினால்; அவற்றையும் அவற்றால் ஓயத் தக்கவாறு இயற்றி - அப்படைக்கலங்களையும் அப்படைகளினாலேயே ஆற்றல் கெடுமாறு செய்து; மற்று உன் சிலைவலித் தருக்கினாலே -