சாப நூல் நெறி மறப்பிலாதாய் - வில்வேத நெறிமுறையினை மறவாதவனே! பதைத்து அவன் வெம்மை ஆடி - அவ் இந்திரசித்து பதைப்புற்று வெகுண்டு; பல்பெரும் பகழி மாரி விதைத்தவன்- பலவேறுவகைப்பட்ட பெரிய அம்புகளை மழைபோற் சொரிவானாயின்; விதையா நின்று விலக்கினை - (நீயும் அங்ஙனமே) சொரியா நின்று விலக்குவாயாக;மெலிவு மிக்கால் உதைத்தவன் சிலையின் வாளி - (அவன்) மெலிவு மிகுந்து வருந்திய நிலையில் நாண் வலிக்கப்பட்ட வலிய வில்லினின்றும் செலுத்தப்படும் அம்பினை; மருமத்தைக் கழிய ஓட்டி வதைத்தொழில் புரிதி - (அவனது) மார்பினைத் துளைத்து ஊடுருவிச் செல்லமாறு செலுத்தி (அவனைக்) கொல்லுந்தொழிலைச் செய்வாயாக.
போரில் தான் உணர்ச்சி வசப்படாமல் நின்று எதிரியை உணர்ச்சி வசப்படச் செய்தல் வெல்லுதற்குப் பயன்படும் ஓர் உத்தி! உணர்ச்சி வசப்பட்டவன் நிதானத்தையும், கூர்ந்தறியும் ஆற்றலையும் இழந்தவனாகிப் பலவீனப்படுகின்றான். அத்தகு பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலக்குவனுக்குக் கூறுகின்றான் இராமன். இதனைப் “பதைத்தவன் வெம்மையாடி” என்பதனாலும் “மெலிவு மிக்கால்” என்பதனாலும் குறித்தார்.
(6)
8940.
‘தொடுப்பதன்முன்னம், வாளிதொடுத்து, அவை துறைகள்தோறும் தடுப்பன் தடுத்தி; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து, தக்க கடுப்பினும், அளவு இலாத கதியினும், கணைகள் காற்றின் விடுப்பன அவற்றை நோக்கி, விடுதியால்-விரைவு இலாதாய்.
விரைவு இலாதாய் - (இடருற்ற போது நிதானமிழந்து) கலங்குதல் இல்லாதவனே! தொடுப்பதன் முன்னம் வாளி தொடுத்து -(இந்திரசித்து நின்மேல்) அம்பு தொடுப்பதற்கு முன்னே (நீ) அவற்றைத் தொடுத்து; துறைகள் தோறும் அவை தடுப்பன தடுத்தி - போர்த்துறைகள் தோறும் தடுத்தற்குரியனவாகிய (பகைவனுடைய) படைக்கலங்களைத் தடுத்து விலக்குவாயாக; எண்ணம் குறிப்பினால் உணர்ந்து - (பகைவனது) மனக்கருத்தினை முகக்குறிப்பு முதலியவற்றால் உணர்ந்து; தக்க