பக்கம் எண் :

786யுத்த காண்டம் 

(இடையிடையே     அமைந்த)  தீவினைப்  போன்று; கூறு ஆய் உக
ஆவி  குறைத்தனனால்
 - கூறுபட்டு விழவும், (அரக்கர் சேனையின்)
உயிரைப் போக்கினான் (இலக்குவன்)
 

கடலில்     திடர் என்றது, கடலின்  இடையே  காணப்படும்  சிறிய
தீவுகளை,   ‘திடலிடைச்   செய்த  கோயில்   திருவிராமேச்  சுரத்தை’
(4-6153) என்பது அப்பர் தேவாரம்.
 

                                                 (31)
 

8965.

வாமக் கரிதான் அழி வார் குழி, வன்
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாமத் தலை உக்க, தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்த்த; உலப்பு இலவால்.
 

வாமக் கரிதான் அழிவார் குழி - அழகிய யானையின்  கால்களால்
மிதிக்கப்பட்டுச்    சிதைந்த    (தரையிடத்தே   உண்டாகிய)    நீண்ட
குழியிடத்தே; வன்  தீ  மொய்த்த  செம்மயிரின்  - வலிய தீச்சுடர்க்
கற்றைகள்   நெருங்கினாற்   போன்ற   செந்நிறமயிரினைக்   கொண்ட;
அரக்கர்கள்   தாமத்  தலைஉக்க  -  அரக்கருடைய  மாலையணிந்த
தலைகள்  சிதறி  விழுந்தவை; தழங்கு  எரியின்  ஓமத்தை  நிகர்த்த
உலப்பு  இலவால்
 -  ஒளி  விட்டொழியும்  யாக குண்டத்தின் தீயை
ஒப்பன எண்ணில்லாதன உளவாயின.
 

                                                 (32)
 

8966.

சிலையின் கணையூடு திறந்தன, திண்
கொலை வெங் களி மால் கரி செம் புனல் கொண்டு,
உலைவு இன்று கிடந்தன, ஒத்தனவால்,
மலையும் சுனையும், வயிறும் உடலும்.
 

திண் கொலை வெங்களி மால் கரி - திண்மையினையும் கொல்லுந்
தொழிலையும்,  வெகுளியையும்  மதச்  செருக்கையும்   உடைய  பெரிய
யானைகள்; சிலையின்  கணையூடு  வயிறும்  உடலும்  திறந்தன  -
(இலக்குவனது)  வில்லினின்றும் வெளிப்படும்  அம்புகளால்  வயிற்றிலும்
உடலிலும்  இடையிடையே  பிளக்கப்பட்டனவாய்; செம்புனல் கொண்டு
உலைவு  இன்று கிடந்தன
- செந்நிறமான குருதிப் புனலைக் கொண்டு
உயிர்  போகாது  கிடந்தவை;  மலையும்  சுனையும்  ஒத்தனவால்  -
மலையையும் (அதன்கண் உள்ள) சுனையையும் ஒத்துத் தோன்றின.
 

                                                 (33)