8967. | வில் தொத்திய வெங் கணை, எண்கின் வியன் பல் தொத்தியபோல் படியப் பலவும், முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன் புற்று ஒத்த-முடித் தலை பூழியன. |
வில் தொத்திய வெங்கணை பலவும் - (இலக்குவனது) வில்லினின்று (வெளிப்பட்டுத்) தொடர்ந்த அம்புகள் பலவும்; எண்கின் வியன்பல் தொத்திய போல் படிய - கரடியின் பெரிய பற்கள் கௌவிப் பற்றினாற் போன்று தைத்து ஊன்ற; பூழியன முடித்தலை - புழுதியிற் கிடப்பனவாகிய முடியணிந் தலைகள்; சுடர்மின்மினி முற்ற மொய்த்துள புற்று ஒத்த - ஒளியினை உடைய மின்மினிப் பூச்சிகள் முழுவதும் மொய்த்துள்ள வலிய புற்றுக்களை ஒத்தன. |
(34) |
8968. | படு மாரி நெடுங் கணை பாய்தலினால், விடும் ஆறு உதிரப் புனல் வீழ்வனவால், தடுமாறு நெடுங் கொடி, தாழ் கடல்வாய் நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால். |
படுமாரி நெடுங்கணை பாய்தலினால் - பெய்கின்ற மழையினைப் போன்று நீண்ட அம்புகள் (உடம்பிற்) பாய்தலினால்; விடும் உதிரப் புனல் ஆறும் வீழ்வனவால் - வெளிப்பட்டுப் பெருகிய குருதி நீர் ஆற்றினையொத்து (ச்சென்று கடலில்) வீழ்வனவாயின; தடுமாறு நெடுங்கொடி - தாழ் கடல்வாய் - (அரக்கர் சேனையினின்றும்) தளர்ந்து வீழும் நீண்ட கொடிகள் ஆழமான கடலிலே; நெடுமா முகில் வீழ்வ நிகர்த்தனவால் - நீண்ட பெரிய மேகங்கள் (படிந்து) வீழ்வனவற்றை ஒத்தன. |
(35) |
8969. | மின் ஆர் கணை தாள் அற வீச, விழுந்து, அன்னார் உதிரத்துள் அழுந்துதலால், ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால், செந் நாகம் விழுங்கிய திங்களினை. |
ஒன்னார் முழுவெண்குடை - பகைவராகிய அரக்கருடைய முழுமை வாய்ந்த வெண்குடைகள்; மின் ஆர் கணை வீச தாள் அற விழுந்து - (இலக்குவன் ஏவிய) ஒளி மிக்க அம்புகள் துணித்தலால் |