பக்கம் எண் :

 நிகும்பலை யாகப் படலம் 789

வாயில்  கனல்  வெங்கடு  வாளி  இனம்  பாய  -  முனையின்
கண்ணே  தீயினையும்,   கொடிய   நஞ்சினையும்   கொண்ட  அம்பின்
தொகுதிகள்   பாய்ந்து    தைத்தலால்;   பருமக்குலம்  வேவனவால்
சினக்கரியே
  -  தம்  மேலுள்ள  கழுத்து  மெத்தை   முதலியவற்றின்
தொகுதிகள்  எரிந்து  வேகும்  நிலையிலுள்ளனவாகிய  வெகுளி  மிக்க
யானைகள்; வேய் உற்ற நெடுங்கரி மீ - மூங்கில் அடர்ந்துள்ள நெடிய
மலைகள் மீது; வெயில் ஆம் தீ உற்றன ஒத்த - வெவ்விய நெருப்புப்
பற்றி எரிவனவற்றை ஒத்தன.
 

                                                 (39)
 

8973.

அலை வேலை அரக்கரை, எண்கின் உகிர்,
தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால்,
மலைமேல் உயர் புற்றினை, வள் உகிரால்,
நிலை பேர, மறிப்ப நிகர்த்தனவால்.
 

அலைவேலை  அரக்கரை எண்கின் உகிர் - அலைகளை உடைய
கடல்  போன்ற   அரக்கரை  (வானர  சேனையிலுள்ள)  கரடிகள்  தம்
நகங்களால்; தரைமேல் முடியைத் தவிர தள்ளுதலால் -  (அவர் தம்)
தலை  மீதுள்ள  மணி  முடியினைப் (பெயர்த்து) தரையில் தள்ளுதலால்;
மலைமேல் உயர்  புற்றினை  வள்உகிரால்  -  மலை  மீது உயர்ந்து
வளர்ந்துள்ள  புற்றினைக்  கூரிய  நகங்களால்;  நிலை  பேர  மறிப்ப
நிகர்த்தனவால்
 - நிலை  பெயரும்  படி பெயர்த்துத் தள்ளுவனவற்றை
ஒத்தன.
 

                                                 (40)
 

8974.

மா வாளிகள் மா மழைபோல் வரலால்,
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்,
மா ஆளிகள் வன் தலையின்தலை வாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால்.
 

மாவாளிகள்  மா மழைபோல் வரலால் - (இலக்குவனது) பெருமை
வாய்ந்த    அம்புகள்    பெரும்    மழையைப்    போன்று   (மிக்கு)
வந்தமையால்;  மா ஆளிகள் போர்  தெறு  மா மறவோர் - பெரிய
சிங்கங்களைப்  போரில்  வெல்லவல்ல  மாவீரர்களாகிய  அரக்கர்களும்;
மா  ஆளிகள் -  (யானை, குதிரை என்னும்)  விலங்குகளை (ப்போரில்)
ஆளும்   வீரர்களும்;  வன்தலையின்  தலைவாழ்  -  (தமது)  வலிய
தலையிடத்தே  (அணியப்  பெற்றுள்ள மலர்களிடத்தில் உள்ளவாம்); மா
ஆளிகளோடு மறிந்தனரால்
- கரிய வண்டுகளோடும் இறந்துபட்டனர்.