பக்கம் எண் :

790யுத்த காண்டம் 

மடக்கு என்னும் சொல்லணி வந்த செய்யுள்.
 

                                                 (41)
 

8975.

அங்கம் கிழியத் துணி பட்டதனால்,
அங்கு அங்கு, இழிகுற்ற அமர்த் தலைவர்,
அம் கங்கு இழி செம்புனல் பம்ப, அலைந்து,
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால்.
 

அங்கு   அங்கு  இழிகுற்ற  அமர்த்  தலைவர்  -  அங்கங்கே
தோல்வியுற்ற  போர்ப்படைத்தலைவர்களுடைய; அங்கம் கிழியத் துணி
பட்டதனால்
-  உடம்புகள் கிழிய வெட்டப்பட்டதனால்; இழிசெம்புனல்
பம்பஅம்  கங்குஅலைந்து
 -  வீழ்கின்ற குருதி நீர் மேலெழ அழகிய
பருந்து   (அவ்வெள்ளத்தில்)   அலைதலுற்று;   அங்கங்கள்  நிரம்பி
அலம்பியதால்
 -  தன்  உடலுறுப்புக்கள் முழுவதும் நிரம்பிக் கழுவப்
பெற்றது.
 

                                                 (42)
 

8976.

வன் தானையை, வார் கணை மாரியினால்,
முன், தாதை, ஓர் தேர்கொடு, மொய் பல தேர்ப்
பின்றா எதிர் தானவர் பேர் அணியைக்
கொன்றான் என, எய்து குறைத்தனனால்.
 

தாதை முன் ஓர் தேர்கொடு மொய் பலதேர்ப்- தன் தந்தையாகிய
தயரதன்   முன்பொருகால்   ஒரே  தேரினைக்   கொண்டு   (தன்னை)
நெருங்கிய பல தேர்களுடன்; பின்றா எதிர் தானவர் பேர் அணியை
- (போரிற்)  பின்னிடாது  எதிர்த்து  நின்ற அசுரர் பெருஞ்  சேனையை;
கொன்றான்   என   வன்தானையை   -  கொன்றவனைப்  போன்று
(இலக்குவனும்    தான்    ஒருவனாகவே   நின்று)   வலிய   அரக்கர்
சேனையை; வார்கணை மாரியினால் எய்து குறைத்தனனால் - நீண்ட
அம்பு மழையினால் எய்து அழித்தான்.
 

                                                 (43)
 

                               இந்திர சித்தன் யாகம் சிதைதல்
 

வேறு
 

8977.

மலைகளும், மழைகளும், வான மீன்களும்,
அலைய வெங் கால் பொர, அழிந்த ஆம் என,
உலை கொள் வெங் கனல் பொதி ஓமம் உற்றலால்,
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ.