பக்கம் எண் :

796யுத்த காண்டம் 

நோன் - வலிமை.  வாள்  -  கூர்மை.  சோரியின்  ஆறு - இரத்த
ஆறு.
 

                                                 (55)
 

8989.

நஞ்சினும் வெய்யவர் நடுங்கி, நா உலர்ந்து,
அஞ்சினர், சிலர் சிலர் அடைகின்றார்; சிலர்
வெஞ் சின வீரர்கள், மீண்டிலாதவர்,
துஞ்சினர், துணை இலர் எனத் துளங்கினார்.
 

நஞ்சினும்  வெய்யவர் சிலர் சிலர் அஞ்சினார் - நஞ்சை  விடக்
கொடுமையுடையோரான   அரக்கர்களுட்  சிலர் சிலர் (இலக்குவன் முன்
நிற்கலாற்றாது)  அஞ்சியவர்களாய்; நடுங்கி நாவுலர்ந்து அடைகின்றார்
- நடுக்கமுற்று நாவறண்டு  இந்திரசித்தை  அடைவாராயினர்; வெஞ்சின
வீரர்கள் மீண்டிலாதவர் சிலர்
- மிக்க வெகுளியுடைய அவ்வீரர்களுள்
மீண்டு  வரமுடியாதவர்  சிலர்; துணை  இலர்  எனத்   துளங்கினார்
துஞ்சினர்
  -   தம்மைத்  தாங்கும்  துணையில்லாதாரைப்  போன்று
மனந்துளங்கி இறந்தனர்.
 

                                                 (56)
 

            வேள்வித் தீ அவிதல் கண்டு இந்திரசித்தன் வெதும்புதல்
 

8990.

ஓம வெங் கனல் அவிந்து, உழைக் கலப்பையும்,
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற,
வாம மந்திரத் தொழில் மறந்து, நந்துறு
தூம வெங் கனல் எனப் பொலிந்து தோன்றினான்.

 

ஓமவெங்கனல்     அவிந்து  -   (வேள்விக்குண்டத்தில்)   ஓமம்
செய்யப்படும்  வெம்மையுடைய  தீ  அவிந்து;  உழைக்   கலப்பையும்
காமர்வண்    தருப்பையும்
  -   (வேள்வியிற்)   பயன்படுத்தற்குரிய
பொருள்கள்  நிறைந்த பையும், அழகிய  வளம்  நிறைந்த  தருப்பையும்;
பிறவும்  கட்டு  அற  வாம  மந்திரத்  தொழில்  மறந்து  -  பிற
பொருள்களும்    கட்டுக்குலைந்து    அழிய     வாம   மந்திரங்களை
எண்ணுதலாகிய தொழிலை  மறந்து;  நந்துறு  தூம வெங்கனல் எனப்
பொலிந்து  தோன்றினான்
  -  அவியும்  நிலையிற்  புகை  படர்ந்த
வெம்மையுடைய    (வேள்வித்)    தீயினைப்   போன்று   (தானும்)
பொலிவிழந்து காணப்பட்டான். (இந்திரசித்து)
 

                                                 (57)
 

8991.

அக் கணத்து, அடு களத்து, அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர, உயிர் உளோர் எலாம்