ஒதுங்கினர், ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப் பதுங்கினர் நடுங்கினர் - (குரங்குகள் வீசிய குன்று மரம் முதலியன தம் மேற்படாதவாறு) ஒதுங்கி விலகிய அரக்கர்கள், ஒருவரின் பின் ஒருவராகப் புகுந்து பதுங்கியவர்களாய் அஞ்சி நடுங்கினர்; பகழி பாய்தலின் - (இலக்குவனது) அம்பு (தமது உடம்பிற்) பாய்தலால்; குடர் பிதுங்கினர் உடல் பிளவு பட்டனர் - குடல் பிதுங்கியவர்களும், உடல் பிளந்தவர்களும்; மதம்புலர் களிறு எனச் சீற்றம் மாறினார் - மதம் வற்றிச் செருக்கடங்கிய யானையைப் போன்று சினம் ஒழிந்தார்கள். |
(67) |
9001. | வீரன் வெங் கணையொடும் கவிகள் வீசிய கார் வரை அரக்கர்தம் கடலின் வீழ்ந்தன, போர் நெடுங் கால் பொர, பொழியும் மா மழைத் தாரையும் மேகமும் படிந்த தன்மைய.
|
வீரன் வெங்கணையொடும் - இலக்குவன் ஏவிய கொடிய அம்புகளோடு; கவிகள் வீசிய கார் வரை - வானரங்கள் வீசிய கரிய மலைகள்; அரக்கர் தம் கடலின் வீழ்ந்தன - அரக்கருடைய சேனையாகிய கடலில் வீழ்ந்தவை; போர் நெடுங் கால்பொர - பொருது அலைக்கும் நெடிய பெருங்காற்று மோதுதலால்; பொழியும் மாமழைத் தாரையும் - பொழிதலை உடைய கரிய மழை மேகங்களின் நீர்த்தாரையும்; மேகமும் படிந்த தன்மைய - (அவற்றையுடைய) மேகங்களும் ஒருசேர (கருங்கடலில்) படிந்த தன்மையை ஒத்தன. |
(68) |
அனுமன் இந்திரசித்தனை எள்ளி நகையாடுதல் |
9002. | திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி, அரக்கனுக்கு அணித்து என அணுகி, அன்னவன் வரக் கதம் சிறப்பன மாற்றம் கூறுவான்; |
திரைக் கடற் பெரும் படை இரிந்து சிந்திட - அலைகளை உடைய கடல் போலும் (அரக்கரது) பெரும் சேனை நிலை கெட்டு சிதறி ஓட; மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி - மரத்தினால் புடைத்துத் தாக்கி வெகுண்ட அனுமன்; அரக்கனுக்கு அணித்து என அணுகி - இந்திரசித்துக்கு அருகாக நெருங்கி நின்று; |