| கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான் உடல்’ என்று, உயிரோடும் உருத்தனனால்.
|
இதுமிடல் ஒன்று சரத்தொடு - (இது) வலிமை பொருந்திய அம்புகளோடு; மீது உயர் வான்திடல் அன்று - மேலே மேடாக உயர்ந்திருக்கிற திட்டு அன்று; திசைக்களிறு அன்று - திசை யானைகளின் (உடலும்) அன்று; ஒரு திண் கடல் அன்று - ஒப்பற்ற வலிமையான கடலும் அன்று; எந்தை கடக் கரியான் உடல் என்று - என் தந்தையாகிய போரில் கடத்தற்கு அரியவனான கும்பகருணின் உடல் என்று (உணர்ந்து); உயிரோடும் உருத்தனனால் - (அதிகாயன்) பெரு மூச்சு விட்டுச் சினப்பட்டான்.
|
இது சரத்தொடு கூடிய உயர்ந்த திடல் அன்று. களிறு அன்று. திண் கடல் அன்று என மறுத்துக் கும்பகருணன் உடல் என்பது பெற வைத்தார். அவன் உடல் திடல், களிறு, கடல் போலும் என்க. மிடல் - வலிமை. கடக்கரியான் என்பதற்கு மதம் கொண்ட யானை போன்றவன் என்றும், யானைப் படையை உடையவன் என்றும் பொருள் உரைப்பார் உளர்.
|
(29)
|
| 7756. | ‘எல்லே! இவை காணிய எய்தினனோ! வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில் செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?’
|
எல்லே - அந்தோ; இவை காணிய எய்தினெனோ - இவற்றைக் காண்பதற்காகவா (இங்கு) வந்தேன்; ஒருநான் - ஒருவனாகிய நான்; வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன் - விரைவாக உயிருடன் உளராகிய மனிதர்களைக் கொல்லாதவனும்; உயிர் கோள் நெறியில் செல்லேன் எனின் - அவர்களது உயிரைக் கொள்ளுவதற்குரிய வழியில் செல்லாதவனும் (ஆனேன்) எனின்; இவ் இடர் தீர்குவெனோ - இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?
|
எல்லே - அந்தோ, இரக்கக் குறிப்பிடைச் சொல். "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ" என்று திருப்பாவைப் பாடல் கூறுதல் காண்க. காணிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்கம். கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
|
(30) |