முதல்வர் எல்லாம் வழிபட வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து வழிபட - (உலகினை இயக்கும்) முதன்மையுடைய கடவுளர் யாவரும் தம் கண்ணின் பார்வைபட்ட அளவிலேயே (அச்சத்தால்) வெதும்பியவராகித் தரைமீது வீ்ழ்ந்து வணங்க; உலகம் மூன்றும் அடிப்பட வந்தேனும் - மூவுலக ஆட்சியும் (தம்) அடிக்கீழ் வந்து பொருந்திற்றாயினும்; அழிபடை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகாப் - தோற்றுப் பின்னிடும் (தமது) சேனையினைப் (பின்னிடாது) பொறுத்துத் தாங்கவல்ல வீரர்கள் எக்காலத்தும் விரும்பாத; பழிபடவந்த வாழ்வை யாவரே நயக்கற்பாலார் - பழியுண்டாகவந்த (அடிமை) வாழ்வினை (மானமும் புகழும் நயக்கும்) யார்தான் விரும்புகின்றவராவார்? |
“பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்” (புறம்-182) எனும் பாடலும், “பழிமலைந்தெய்திய வாக்கத்தின் சான்றோர், கழி நல்குரவே தலை (குறள்657) என்ற குறளும் ஈண்டு ஒப்புக் காணத்தக்கன. |
(164) |
9098. | ‘நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம் வேர் உளதனையும் வீரர், இராவணனோடு; மீளார்; ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உளை; உறைய; நின்னோடு ஆர் உளர் அரக்கர் நிற்பார், அரசு வீற்றிருக்க? ஐயா! |
நீர் உளதனையும் உள்ள மீன் என, நிருதர் எல்லாம் - நீர் இருக்கும் அளவும் உயிர் தாங்கியுள்ள மீன் என்னும்படி அரக்கர்கள் எல்லோரும்; வேர் உளதனையும் வீவர் இராவணனோடு; மீளார்- வேர் (மூலகாரணம்) உள்ள அளவும் (போர் செய்து) இராவணனோடு இறந்தொழிவர் (அவர்களில் எவரும் உயிருடன்) மீளமாட்டார்கள்; ஐயா! ஊர் உளது; ஒருவன் நின்றாய் நீ உறைய உளை - ஐயனே! இலங்கையாகிய ஊர் மட்டும் எஞ்சி இருக்கும். ஒருவனாக நின்றாயாகிய நீ (இங்கு) தங்குதற்கு உயிரோடு உள்ளாய்; அரசு வீற்றிருக்க நின்னோடு நிற்பார் அரக்கர் ஆர் உளர்? - நீ அரசனாக வீற்றிருக்க நினக்குத் துணையாக நிற்பார் அரக்கர் இனத்தாரில் வேறு யார் உள்ளார்கள்? |
(165) |