27. இந்திரசித்து வதைப் படலம் |
இலக்குவன் இந்திரசித்தனை வதை செய்த (கொன்ற) நிகழ்ச்சியைக் கூறும் பகுதியாகலின் இப்பகுதி இந்திரசித்து வதைப்படலம் எனப் பெயர் பெற்றது. சில ஏடுகளில் இப்படலம் நிகும்பலைப் படலத்தோடு சேர்ந்தே காணப்படுகின்றது. |
நிகும்பலை யாகம் குலைய, போர் செய்து தேர் இழந்து இந்திரசித்தன் ஊர் திரும்புகின்றான். தந்தையைச் சந்தித்து இராமலக்குவர் பரம் பொருள் என அறிவித்து சீதையை விட்டுவிட வேண்டுகிறான். மறுத்துரைத்த இராவணனிடம் பொறுக்கும்படி வேண்டிப் போர்க்குப் புறப்படுகிறான். இலக்குவனை எதிர்க்கின்றான். அற்புதமான போர் செய்கின்றான். இந்திரசித்து இரவில் இறவான் என்பதனை வீடணன் எடுத்துரைத்து இந்திரசித்துவை உடனே கொல்ல இலக்குவனைத் தூண்டுகின்றான். சிவன் கொடுத்த தேரும் வில்லும் இருக்கும் வரை இந்திரசித்தை அழிக்க இயலாது என்கிறான் வீடணன். இலக்குவன் இந்திரசித்தின் தேரையும் வில்லையும் அழிக்கிறான். பிறைமுக அம்பு ஒன்றினை எய்து இராமன் பரம் பொருள் என்பது சத்தியமானால் இந்திரசித்துவை இது கொல்க! என்று ஏவுகிறான். இந்திரசித்து வீழ்கிறான். அவன் தலையை ஏந்தி அங்கதன் முன்னே செல்ல இலக்குவன் முதல் அனைவரும் பின்னே செல்கின்றனர். |
இராமன் திருவடிக்கீழ் இந்திரசித்தின் தலையை வைத்துப் பணிகிறான் இலக்குவன். இராமன் மகிழ்ச்சி கொண்டு வீடணனைப் புகழ்ந்து பேசுகிறான். அனைவரும் மகிழ்கின்றனர். இச்செய்திகள் இப்படலத்துக் கூறப்படுகின்றன. |
இந்திரசித்தின் அனுபவ ஞானம், இராவணனின் மூர்க்கத்தனம் முதலியவை இப்படலத்துக் கம்பரின் சொற்சித்திரங்களாக மலர்கின்றன. |
இராவணன் இந்திரசித்திடம் ‘நிகழ்ந்ததை உரை’ எனல் |
9116. | விண்ணிடைக் கரந்தான் என்பார், ‘வஞ்சனை விளைக்கும்’ என்பார், கண்ணிடைக் கலக்க நோக்கி, ஐயுறவு உழக்கும் காலை, |