இராமன் பரம் பொருளானால் அப்பரமே இராவணனை வெல்வதற்கு மண்ணில் பிறப்பெடுத்து வென்றதெனில்; அதற்காக அதன் பெயர் வேதமுள்ளவும் நிற்குமாயின், அதனோடு சேர்ந்து என் பெயரும் நிற்குமன்றோ என்கின்றான். இறுதி இரண்டடிகள் அற்புதமானவை. “இன்றுளேன் நாளையில்லேன் என் செய்வான் தோன்றினேனே“ (அப்பர். தே.வா 4:78:1) என்பதனையும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன்றில்“ (233) என்ற குறளினையும் இதனோடு ஒத்துக் காண்க. “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே“ என்ற புறப்பாடல் அடியும் இங்கு நினைக்கத்தகும். “இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பர் என்று எண்ணவோ திடமில்லை“ என்பார் தாயுமான அடிகள். |
9126. | ‘“விட்டனென், சீதைதன்னை“ என்றலும், விண்ணோர் நண்ணி, கட்டுவது அல்லால், என்னை யான் எனக் கருதுவாரோ? “பட்டனென்“ என்ற போதும், எளிமையின் படுகிலேன் யான், எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து வென்றேன். |