அனல் விழி நிருதன் வழங்கு அடுகணை இடை இடை அற்றன - நெருப்புப் போன்ற கண்களை உடைய இந்திரசித்து எய்த கொல்லும் இயல்புள்ள அம்புகள் (இலக்குவனால் துணிக்கப் பெற்று) இடை இடையே அற்று வீழ்ந்தன; அடல் அரியின் கொற்றவன் விடுகணை முடுகி - வலிய சிங்கத்தைப் போன்ற வெற்றியை உடைய இலக்குவன் விடுகின்ற அம்புகள் விரைந்து சென்று; அவன் உடல் பொதிகுருதிகள் பருகின கொண்டு உற்றன - அவ்வரக்கனது உடலில் நிறைந்த இரத்தத்தைப் பருகிக்கொண்டு அங்கே தங்கின; நெடும் பொரு சரம், ஒளிகிளர் கவசம் நுழைந்து உறுகில, தெறுகில - இந்திர சித்து விடும் நெடிய அம்புகள் இலக்குவனது ஒளியோடு விளங்கும் கவசத்தில் நுழைந்து உடம்பில் தைக்கவுமில்லை அவனை வருத்தவுமில்லை; அனுமன் உடல் புற்றிடை அரவு என நுழைய அவன் அவை உணர்கிலனால் - ஆயின் (அவன் ஊர்தியான) அனுமனது உடம்பில் புற்றிடை நுழையும் பாம்புகள் போல எளிதாக நுழைந்தன; அவ்வனுமன் அவற்றை உணராதவனாயிருந்தான். |
9139. | ஆயிடை, இளைவன், விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட, தூயினன், அயில் முக விசிகம்; நெடுந் துளைபட, விழி கனல் சொரிய, முனிந்து, ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து ஓய்வுறுவன; அது தெரிவுறலால், உரறினர் இமையவர், உவகையினால். |