கையிலிருந்த படைகளையும் விட்டுவிட்டுச் சிறந்த மதிலை உடைய இலங்கையை நோக்கி ஓடினார்கள். |
(55) |
9171. | வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும், ‘செல்லாது, அவ் இலங்கை வேந்தற்கு அரசு’ எனக்களித்த தேவர் எல்லாரும், தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது, கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார். |
வில்லாளர் ஆனார்க் கெல்லாம் மேலவன் விளிதலோடும் - வில்வீரர்க்கெல்லாம் மேம்பட்டவனாகிய இந்திரசித்து இறந்து விட்டமையால்; அவ்இலங்கை வேந்தற்கு அரசு செல்லாது எனக்களித்த தேவர் - ‘அந்த இலங்கை வேந்தனாகிய இராவணனுக்கு அரசு நடவாது’ என்று களிப்படைந்த தேவர்கள்; எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது - யாவரும் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்த்து விண்ணில் ஏறிடுமாறு வீசி ஆரவாரித்தபோது; கொல்லாத விரதத்தார் தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் - (அத்தேவர்கள் அம்மணமாக இருத்தலின்) கொல்லாத விரதம் பூண்ட அருக சமயத்தவரின் கடவுளர் கூட்டத்தை ஒத்துத் தோன்றினார்கள். |
இராவணன் ஆட்சியில் அல்லலுற்ற தேவர்கள் இந்திரசித்தின் வீழ்ச்சி கண்டதும் இனி அவ் இராவணன் ஆட்சி நடவாது என்ற மகிழ்ச்சியினால் உடுத்த ஆடையையும் விண்ணில் ஏறிடுமாறு வீசி ஆரவாரம் செய்தனர் என்பதாம். மகிழ்ச்சி மிகுதியினால் இவ்வாறு ஆடைகளை வீசி ஆரவாரித்தல் உண்டு என்பதனை, “மறையோரெல்லாம் உத்தரியம் விண்ணிலேற விட்டு ஆர்த்தார்” (பெரியபு. வெள்ளானை - 13) என்பதாலும், “மாமறையோர் குழாத்துடனும் மல்குதிருத்தொண்டர் குழாம் மருங்கு ஆர்க்கும் தன்மையாலே“ (பெரியபு. திருஞான சம்பந்தர் - 95) என்பதாலும் அறியலாம். |
கொல்லாதவிரதத்தார் - சமணர். அவருள் திகம்பரர் என்பவர் ஆடையின்றி அமணமாக இருப்பர். அவர் வணங்கும் கடவுளும் அத்தகையவரே. அவர் ஒருவரே, இங்கு தேவர்கள் பலராகலின், ‘கடவுளர் கூட்டம் ஒத்தார்’ எனக் கூறினார். |
(56) |