ஒருவர்க்குக் கண்ணீர் பெருகுதற்குரிய காரணங்கள் அன்பும், அழுகையும், கருணையும் என நான்காகுமானால், இராமன் இலக்குவன் மீண்டமை கண்டு சொரிந்த கண்ணீர் இந்நான்கனுள் எக்காரணம் பற்றியது என அறிவது அரிதாகுமென்பார், “யார் அது ஓர்வார்?” என்றார். ஒருவேளை இந்நான்குமே காரணம் ஆதலும் கூடும்! “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன் கணீர் பூசல்தரும்” (71) என்னும் வள்ளுவத்தின் படி அன்பினால் கண்ணீர் தோன்றலாம்; பிரிவினால் கண்ணீர் வருமென்பதை உலகியலிலேயே உணரலாம்! உவகையினால் கண்ணீர் ருமென்பதை, “வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டனனென்னுமுவகை, ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர், நோன் கழை துயல்வரும் வெதிரத்து. வான்பெயத்தூங்கிய சிதரினும் பலவே” (277) என்னும் புறப்பாட்டால் உணரலாம். கருணையென்பது தொடர்பு கருதாத மன நெகிழ்ச்சி உயிர்கள் மேல் வைத்த நேயம். இஃது என்புருகக் கசியும் கசிவு. இராமனின் கண்ணீர் இதில் எவ்வகைப் பட்டது? என்று வினவிய கவிஞர், யாரறிவார் என முடித்துள்ளார். |