குறித்தார். இலக்குவன் மார்பிலும் தோள்களிலுமுள்ள இரத்தச்சுவடுகள் தன்மார்பிலும் தோள்களிலும் தோன்றத் தழுவிக்கொண்டான் என்றார். |
(67) |
அறுசீர்ச் சந்த விருத்தம் |
9183. | ‘கம்ப மதத்துக் களி யானைக் காவல் சனகன் பெற்றெடுத்த கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்; வம்பு செறிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தி்ல், “தம்பி உடையான் பகை அஞ்சான்” என்னும் மாற்றம் தந்தனையால்.* |
கம்பமதத்துக் களியானைக் காவல்சனகன் பெற்றெடுத்த - (இலக்குவ! நீ இந்திரசித்தனை வென்றதனால்) அசைந்தாடும் இயல்புயை மதக்களிப்பு மிக்க யானை போன்று தன் இனத்தைக் காக்கும் காவற்சிறப்பினை உடைய சனகன் பெற்ற; கொம்பும் என்பால் இனி வந்து குறுகினள் என்று அகம் குளிர்ந்தேன் - பூங்கொம்பு போன்றவளாகிய சீதையும் இனி என்னிடம் வந்து நெருங்கிவிட்டாள் என்று மனங்குளிர்ந்தேன்; வம்பு செறிந்த மலர்க்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் - மணம் நிறைந்த தாமரை மலரைக் கோயிலாகக் கொண்ட பிரமன் படைத்த இப்பெரிய உலகத்தில்; “தம்பி உடையன் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் - “தம்பியை உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” என்னும் சொல்லை எனக்குத் தந்தனை” (என்று பாராட்டினான்). |
கம்பம் - அசைவு. யானை தன் இனத்தைக் காப்பதில் தலை சிறந்ததாதலின் அது போன்ற காவற் சிறப்பினை உடையவன் சனகன் என்றவாறு. “சீதை என்பால் குறுகினள் என்று அகம் குளிர்ந்தேன்.” “தம்பி உடையான் பகையஞ்சான்” என்னும் மாற்றம் தந்தனை” என்றெல்லாம் இராமன் பாராட்டுவதன் காரணம் இந்திரசித்தன் மேல் கிடைத்த வெற்றியேயாம். இனி இராவண வதம் எளிமை என்பது குறிப்பு. துள்ளும் ஓசையில் இந்த அறுசீர்ச் சந்த விருத்தம் ஒன்றினை இடையே கம்பர் அமைத்து இராமபிரானின் உள்ளத்தே துள்ளும் களிப்பினைப் படம் பிடித்துக் காட்டினார் என்பது மகாவித்துவான். மயிலம். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து. |
(68) |