பகை ஆடிய வானவர் பல்வகை ஊர் - (இவ்வதிகாயனோடு) பகைமை கொண்ட தேவர்களின் பல பகுப்புகள் கொண்ட ஊர்களை; புகை ஆடிய நாள் - (இவன்) சுட்டு எரிக்கத் தொடங்கிய காலத்தில்; புனை வாகையினான் - வெற்றிக்குறியாகிய வாகை மாலை அணிந்த திருமால்; மிகை ஆர் உயிர் உண் என வீசிய - (இவனது) தேவையற்ற குற்றமுள்ள இனிய உயிரை அழிப்பாய் என்று வீசிய; வெந்தகை ஆழி தகைந்த தனுத் தொழிலோன் - கொடிய தன்மை பொருந்திய சக்கரப் படையைத் தடுத்த வில்லாற்றல் தொழில் உடையவன் |
பல்வகை ஊர் பல பகுப்புக்களைக் கொண்ட ஊர் புனை வாகையினான் - வாகை மாலை புனைந்த திருமால். வெற்றிக் குறியாக வாகை மாலை புனைதலை |
இலைபுனை வாகை சூடி இகல் மலைந்து அலை கடல் தானை அரசு அட்டு ஆர்ந்தன்று |
என்ற புறப்பொருளின் வெண்பா மாலைச் சூத்திரம் விளக்கும். மிகை - தேவையற்ற, அழி - சுதர்சனம் என்னும் பெயருடைய சக்கரம். தகைந்த - தடுத்த. |
(61) |
| 7788. | ‘உயிர் ஒப்பறு பல் படை உள்ள எலாம், செயிர் ஒப்புறும் இந்திரர், சிந்திய நாள், அயிர் ஒப்பன நுண் துகள்செய்து, அவர்தம் வயிரப் படை தள்ளிய வாளியினான்; |
செயிர் ஒப்புறும் இந்திரர் - சினம் மிகக் கொண்ட இந்திரன்; உயிர் ஒப்புறும் உள்ள எலாம் பல் படை - தன் உயிருக்கு ஒப்பாகக் கூறத்தக்க தன்னிடம் உள்ள பலவகையான படைக்கலங்களை; சிந்திய நாள் - (இவ்வதிகாயன் மீது) செலுத்திய காலத்தில்; அயிர் ஒப்பன நுண்துகள் செய்து - (இவன் அப்படைக்கலங்களை) மணலுக்கு ஒப்பான நுண்ணிய பொடியாகச் செய்து; அவர் தம் வயிரப்படை தள்ளிய வாளியினான் - அந்த இந்திரனின் வச்சிராயு தத்தை வலியிலதாக்கிய அம்புகளை உடையவன். |
இந்திரர் - ஒருமை பன்மையாகக் கூறப்பட்டது. இந்திரர் பலர் எனலும் உண்டு. யாகம் செய்து அடையும் பதவி ஆதலின் இந்திர பதவிக்கு வருவோர் மாறிக்கொண்டு வரும் தன்மை பற்றிப் பன்மையால் கூறினார் எனலும் ஆம். இந்திரர் - தேவர் எனக் கொண்டு பொருள் உரைப்பாருமுளர். அவ்வாறு உரைக்கின் பல்படை சிந்தியவர் தேவர்கள் என்றும், வயிரப் படை செலுத்தியவன் அவர்களின் தலைவனாகிய |