அதி - மிகுதிப் பொருளை உணர்த்தும் ஒரு வடமொழி இடைச் சொல். கைதவர் - வஞ்சனை உடையவர். கட்டல் - அழித்தல், அழி அனந்தன் - திருமால். கைம்மிக - மிகுதியாக. |
(66) |
| 7793. | ‘நீர் ஆழி இழிந்து, நெடுந்தகையை, "தாராய் அமர்" என்றனர், தாம் ஒரு நாள்; ஆர் ஆழிய அண்ணலும், அஃது இசையா, "வாரா, அமர் செய்க!" என வந்தனனால், |
தாம் ஒருநாள் - (அவர்கள்) தாம் ஒருநாள்; நீர் ஆழி இழிந்து - பாற்கடலில் இறங்கி; நெடுந்தகையை - பெருந்தன்மையுள்ள திருமாலைப் பார்த்து; அமர் தாராய் என்றனர் - போர் தருவாய் என்றனர்; ஆர் ஆழிய அண்ணலும் - வெலற்கரிய சக்கரப் படையை ஏந்திய தலைவனான (திருமாலும்); அஃது இசையா - அதனை ஏற்றுக்கொண்டு; வாராஅமர் செய்க என்று வந்தனனால் - இது வரையில் நிகழ்ந்திராத (கொடிய) போரைச் செய்க என்று சொல்லி வந்தான். |
ஆழி - கடல். இழிந்து - இறங்கி, அமர் - போர், வாரா - இது வரையில் நிகழ்ந்திராத. |
(67) |
| 7794. | ‘வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும், நல்லார் முறை வீசி, நகும் திறலார் மல்லால் இளகாது, மலைந்தனன் மால்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால். |
வல்லார் உரு ஆயிரம் ஆய்வரினும் - வல்லமை உடையவர் உரு ஆயிரம் கொண்டு வந்தாலும்; நல்வார் முறை வீசி நகும் திறலார் - நன்மை மிகுந்த போர் முறையால் வீசிச் சிரிக்கும் வலிமையுடையவரான (அந்த மதுகைடபருடன்); மால் மல்லால் இளகாது மலைந்தனன் - திருமால் மற்போரினால் பின் வாங்காது போரிட்டனன்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் - அங்ஙனம் போர் புரிகை நாள்கள் ஆயிரம் கழிந்து போயின. |
மல் - மற்போர், அல் - நாள், அஃகின - கழிந்து போயின. |
(68) |
| 7795. | ‘தன் போல்பவர் தானும் இலாத தனிப் பொன்போல் ஒளிர் மேனியனை, "புகழோய்! |