9506. | நின்றாருடன் நின்று, நிமிர்ந்து அயலே |
| சென்றார் எதிர் சென்று, சிதைத்திடலால், |
| 'தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் |
| கொன்றான் அவனே இவன்' என்று கொள்வார். |
|
நின்றாருடன் நின்று- தன்னை எதிர்த்து நின்றவர்களுடன் எதிர்த்து நின்றும்; நிமிர்ந்து- மேலோங்கி; அயலே சென்றார் எதிர் சென்று- பக்கத்தே சென்றார்க்கும் எதிரே சென்றும்; சிதைத்திடலால்- கொல்லுவதால்; ஓர்வு உறு தன் மகன் நேர் - ஞானத்தால் உணர்வுறுகின்ற தன் மகனுக்கு முன்பாகவே; தன் தாதையைக் கொன்றான் அவனே இவன் - தன் தந்தையைக் கொன்றவனாகிய அந்த நரசிங்கனே இவன்; என்று கொள்வார் - என அரக்கர்கள் இராமனைப் பற்றிக் கருதினார்கள். |
(208) |
9507. | 'இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன்' என்று |
| அங்கே உணர்கின்ற அலந்தலைவாய், |
| வெங் கோப நெடும் படை வெஞ் சரம் விட்டு |
| எங்கேனும் வழங்குவர், ஏகுவரால். |
|
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று- (இராமபிரான் விரைவாகச் சாரி சுழன்று இலங்குவதால், அவன் எங்கும் இருப்பவனாய்த் தோற்றம் அளித்தான் அதனால் இராமன் இங்கே இருக்கிறான் இதோ இருக்கிறான், இங்குத்தான் இருக்கிறான் என்று); அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்- அங்கங்கே இருப்பவனாக உணர்கின்ற கலக்கத்தால்; வெங் கோப நெடும்படை- கொடிய கோபத்தால் பயன்படுத்துகின்ற நெடிய வில்லாகிய படைக்கலத்திலிருந்து; வெஞ்சரம் விட்டு- கொடிய அம்புகளை எய்து; எங்கேனும் வழங்குவர்- எந்தத் திசையிலும் வழங்கினராய்; ஏகுவர்- (அத்திசையிலே இராமனைத் தாக்க முடியாமல் வேறு பக்கம்) போவார்கள். |
(209) |
9508. | ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார், |
| 'இரவு அன்று இது; ஓர் பகல்' என்பர்களால்; |
| 'கரவு அன்று இது; இராமர் கணக்கு இலரால்; |
| பரவை மணலின் பலர்' என்பர்களால். |