பக்கம் எண் :

198யுத்த காண்டம் 

31. வேல் ஏற்ற படலம்
 

வீடணன் மேல்  இராவணன் எறிந்த வேலை இலக்குவன் தன்
மார்பில் ஏற்றுக்   கொண்டதைக் கூறும் பகுதி. இது, 'வேலேற்றுப்
படலம்'  'வேலேற்றும்   படலம்'  'வேலேற்றப்  படலம்' எனவும்
காணப்படும்.
 

இராவணனின் வலிமையோடு போர் செய்வது அரிது. அவனோடு
போரிட்டு  மடிவதே  நல்லது என்ற துணிவோடு வானரப் படைகள்
போரிட்டன. தன்    அரக்கர்   சேனை   வலி   குன்றக்   கண்டு
கடுமையான கணைகளை  ஏவ வானரசேனை நிலைகுலைகிறது. அது
கண்டு 'அஞ்சற்க' என இலக்குவன் வருகிறான். அவன் பேராற்றலைக்
கண்ட இராவணன் 'இவனை அம்பு எய்து வெல்லுதல்   அரிது என
மோகன மந்திரமிட்டு   ஏவுகிறான். வடிவற்ற   அதனை இலக்குவன்,
வீடணன் உரை கேட்டு நாரணன் கணையை  விட்டுத் தவிர்க்கிறான்.
தன் செயலுக்கு வீடணன் தடை எனக் கண்டு அவன் மீது தன்னிடம்
மயன் தந்த வேலை   எய்கிறான். அதை எதிர்த்து இலக்குவன் விட்ட
கணைகள், பயனற்றுப் போயின. அதை ஏற்கத்தானே முன்வர வீடணன்
முந்த அவர்களை அங்கதன்,   சுக்ரீவன்,   அனுமன் முந்துகின்றனர்.
எனினும் அடைக்கலம் தந்தவனைக் காத்தல் தன் கடன் என இலக்குவன்
தன் மார்பிலேற்று வீழ்கிறான்.
 

வீடணன்    அது    கண்டு   இராவணன்  தேர்க்குதிரைகளையும்
தேரோட்டியையும்   வீழ்த்துகிறான். வீடணன்   மீது அம்பு பாய்ச்சிய
இராவணன்  இலங்கை   செல்கிறான்.   வீடணன் தடுத்தும் அவனைப்
பொருட்படுத்தாமல் இராவணன் செல்கிறான்.
 

இலக்குவன் வீழத்  தான்  இருப்பதில்  பயனில்லை என வீடணன்
சாவ  எண்ணும் போது சாம்பவன் வந்து அனுமன் உளன் என ஆறுதல்
கூறி அனுமனை   ஏவ வட திசை சென்று மருந்துமலை கொணர அதன்
மணம் பட்டவுடன் இலக்குவன் வாழ்வதறிந்து மகிழ்கிறான்.
 

பின்னர் யாவரும்   இராமனைக்    காணச்  செல்கின்றனர். என்ன
நிகழ்ந்தது?   என     இராமன்   கேட்கச்   சாம்பவன்   யாவும் கூற
இராமன்     இலக்குவன்      செயலைப்   பாராட்டினான்.    இவை
இப்படலத்துக் கூறப்படும் செய்திகளாகும்.