| நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? |
| நொடிதல் முன்னே |
| இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய |
| வீரன். |
|
தந்தனன் மருந்து தன்னை - அனுமன் தந்த நல்ல மருந்தை; தாக்குதல் முன்னே யோகம் வந்தது- மருந்தின் வாசனை வருமுன்னே நல்வினை கூடிற்று; மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால்- செத்தவர் எல்லார்க்கும் உயிர் அளிக்கும் வலிமையுடையது என்றால்; நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ - வேலால் துன்புற்றவரின் துன்பம் தீர்ப்பது சிறிய சொல் அல்லவா? இந்திரன் உலகம் ஆர்க்க - தேவர் உலகம் ஆரவாரம் செய்ய; நொடிதல் முன்னே இளைய வீரன் எழுந்தனன்- நொடிப் பொழுதில் இலக்குவன் உயிர் பெற்று எழுந்தான். |
சில சுவடிகளில் இச்செய்யுளோடு இப்படலம் முடிவுறும். |
(42) |
இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணன் நலம் உசாவல் |
9573. | எழுந்து நின்று, அனுமன்தன்னை இரு கையால் |
| தழுவி, 'எந்தாய்! |
| விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!' என்ன, |
| விம்மித் |
| தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் |
| துயரும், நீக்கி |
| 'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்' என்று |
| உவகை கொண்டான் |
|
எழுந்து நின்று- இலக்குவன் எழுந்து நின்று; அனுமன் தன்னை இரு கையால் தழுவி - அனுமனைத் தன் இரு கைகளாலும் தழுவிக்கொண்டு; எந்தாய் விழுந்திலன் அன்றோ மற்று அவ்வீடணன் என்ன - எம் தந்தை போன்றவனே! அந்த வீடணன் இறந்து பட வில்லை அல்லவா என்று கேட்க; விம்மித் தொழும் துணையவனை நோக்கி - (அது கேட்டுத்) தேம்பித் தன்னை வணங்கும் துணைவனைப் பார்த்து; துணுக்கமும் துயரும் நீக்கி- மன நடுக்கமும் துன்பமும் தீர்ந்து; அரக்கன் பட்டான் - இராவணன் இனி மாண்டான்; கொழுந்தியும் மீண்டாள் - சீதையும் சிறை மீண்டாள்; என்று உவகை கொண்டான் - என மகிழ்ச்சி கொண்டான். |
(43) |