| ஊட்டு அரக்கு அனைய செங் கண் நெருப்பு உக, |
| உயிர்ப்பு வீங்க, |
| தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த |
| நெஞ்சன். |
|
ஈட்ட அரும் உவகை ஈட்டி இருந்தவன்- (இலக்குவனை மாய்த்தோம் எனப் பிறரால் பெறற்கரும் மகிழ்ச்சியைப் பெற்று இருந்த இராவணன்; இசைத்த மாற்றம் கேட்டலும் - (தூதுவர்) கூறிய சொல்லைக் கேட்டதும்; வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி - கோபத்துடன் நடுக்கமும் இழப்பும் சேர; ஊட்டு அரக்கு அனைய செங்கண்- செல்வரக்குப் போன்ற தன் சிவந்த கண்கள்; நெருப்பு உக - (கோபத்தால்) தீப்பொறி சிந்த; உயிர்ப்பு வீங்க - பெருமூச்சு உண்டாக; திகைத்த நெஞ்சன் - திகைப்படைந்த மனம் கொண்டவனாய்; தீட்டியபடிவம் என்னத் தோன்றினன் - எழுதிய சித்திரப் பாவை போல் அசையாமல் இருந்தான். |
(11) |
9628. | 'என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் |
| வீயார்; |
| உன்னினும், உலப்பு இலாதார்; உவரியின் மணலின் |
| நீள்வார்; |
| ''பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்'' என்று |
| பேசும் |
| இந் நிலை இதுவோ? பொய்ம்மை விளிம்பினிர் |
| போலும்' என்றான். |
|
என்னினும் வலியர் ஆன இராக்கதர் - என்னைவிட வலிமை கொண்டவரான மூலப்படை வீரர்; யாண்டும் வீயார்- எப்போதும் எங்கும் அழியாதவர்கள்; உன்னினும் உவப்பு இலாதார் - நினைப்பினால் கொல்வதானாலும் கொல்ல முடியாதவர்கள்; உவரியின் மணலின் நீள்வார் - கடல் மணலைக் காட்டிலும் எண்ணிக்கை மிக்கவர்; பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர்- பின்பு காண ஒருவருமின்றி இறந்தனர்; என்று பேசும் இந்நிலை இதுவோ - என நீர் கூறும் இந்நிலை இதுவோ; பொய்ம்மை விளிம்பினிர் போலும் என்றான் - பொய் சொன்னீர் என்று கூறினான் இராவணன்; |