உயிர்த்திலள், உணர்வும் இல்லள் - (அங்ஙனம் வீழ்ந்த மண்டோதரி) மூச்சடங்கி உணர்வற்றவளாய்; 'உயிர் இலள் கொல்லோ!' என்ன யாக்கை பெயர்த்திலள்- உயிர் நீங்கப் பெற்றாளோ என ஐயுறுமாறு உடம்பு அசையாதவளாய்; விம்மி யாதும் ஒன்றும் பேசலள் வியர்த்திலள்- விம்மலெடுத்து எதைப் பற்றியும் பேசாதவளாய், வியர்வரும்பாதவளாய்; நெடிது போது அயர்த்தனள் - நீண்ட நேரம் அயர்ச்சியுற்றுக் கிடந்து; மெல்ல மெல்ல அரிதின் தேறி விம்மலள்- பின்பு மெல்ல மெல்ல அரிதில் தெளிந்து தேம்பி; வாய் திறந்து அரற்றலுற்றாள்- வாய் திறந்து அரற்றத் தொடங்கினாள். |
பெருந்துயர் உற்றவர்களின் மெய்ப்பாடுகள் கவிஞரால் நுட்பமாகப் புலப்படுத்தப் பெறுகின்றன. இலக்குவன் பிரமாத்திரத்தால் வீழ்ந்து கிடந்ததைக் கண்ட இராமனின் மெய்ப்பாடுகளாக (கம்ப. 8639) விவரிக்கப்படுபவை இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாம். |
(46) |
| 9232. | 'கலையினால் திங்கள் என்ன வளர்கின்ற காலத்தே |
| உன், |
| சிலையினால் அரியை வெல்லக் காண்பது ஓர் தவம் |
| முன் செய்தேன்; |
| தலை இலா ஆக்கை காண எத் தவம் செய்தேன்! |
| அந்தோ! |
| நிலை இலா வாழ்வை இன்னும் நினைவெனோ, |
| நினைவு இலாதேன்? |
| |
கலையினால் திங்கள் என்ன- நாளுக்கு நாள் கலையினால் (வளர்கின்ற) சந்திரனைப் போல; வளர்கின்ற காலத்தே- வளர்கின்ற இளம் பருவத்தே; உன் சிலையினால் அரியை வெல்லக்- உன் வில்லினால் இந்திரனை வெல்ல; காண்பது ஓர் தவம் முன் செய்தேன் - கண்டு மகிழும் தவத்தை முன் செய்திருந்தேன்; தலை இலா ஆக்கை காண - தலையில்லாத நின் உடம்பைக் காண்பதற்கு; எத்தவம் செய்தேன்! அந்தோ!- எந்தத் தவத்தை (பாவத்தை)ச் செய்தேன்! அந்தோ! நினைவு இலாதேன் - நல்ல நினைவு இல்லாத யான்; நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனா- (இவ்வாறு) நிலையில்லாத வாழ்வினை இனியும் மதித்திருப்பேனா? |